×

சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படி பொறுத்துக் கொள்ளமுடியும்?; ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு வயிற்றெரிச்சல்: விசிக தலைவர் திருமாவளவன் கடும் கண்டனம்

சென்னை: ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு வயிற்றெரிச்சல் என விசிக தலைவர் திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறுகையில், நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அரசியல் சாசனம் தொடர்பாக மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவையிலும் விவாதம் நடைபெற்றது. மக்களவை விவாதங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியும், மாநிலங்களவை விவாதத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பதிலளித்தனர். அப்போது அமித்ஷாவுடைய பேச்சு சர்ச்சையாகியுள்ளது.

அமித்ஷா பேசும்போது, “தற்போதைய அரசியலில் எதற்கெடுத்தாலும் அம்பேத்கர்.. அம்பேத்கர் என்று பேசுவது பேஷனாகிவிட்டது. இப்படி சொல்வதற்கு பதிலாக கடவுளின் நாமத்தை பல முறை உச்சரித்தால் அவர்களுக்கு சொர்க்கமாவது கிடைக்கும் என தெரிவித்திருந்தார். அமித்ஷாவின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு வயிற்றெரிச்சல் என விசிக தலைவர் திருமாவளவன் எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களைப்பற்றி நாடே பேசுகிறது என்பதை சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படி பொறுத்துக் கொள்ளமுடியும்? எவ்வளவு வயிற்றெரிச்சல் அவர்களுக்கு என்பதை அமித்ஷா வெளிப்படுத்திவிட்டார். அவர் தனது முகத்திரையைத் தானே கிழித்துக் கொண்டார். இதுதான் சங்பரிவார்களின் உண்மை முகம். அரசமைப்புச் சட்டமும் புரட்சியாளர் அம்பேத்கரும் தான் அவர்களின் உண்மையான எதிரிகள். இதனையே விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம். சங்பரிவார்கள் புரட்சியாளர் அம்பேத்கரைப் போற்றுவதெல்லாம் எளிய மக்களை ஏய்க்கும் எத்து வேலைகள். புரட்சியாளர் அம்பேத்கர் “விசுவரூபம் ” எடுக்கிறார். சனாதனிகளின் சதிமுயற்சிகள் சாம்பலாகும்! என பதிவிட்டுள்ளார்.

 

The post சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படி பொறுத்துக் கொள்ளமுடியும்?; ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு வயிற்றெரிச்சல்: விசிக தலைவர் திருமாவளவன் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Savarkar ,Union Minister ,Amitshah ,Vice President ,Tirumalavan ,Chennai ,Thirumavalavan ,
× RELATED அரசியலமைப்பு சட்டத்தை வெறுத்து...