×

மார்கழி செவ்வாய் என்பதால் சிறுவாபுரியில் பக்தர்கள் குவிந்தனர்

பெரியபாளையம்: சிறுவாபுரி முருகன் கோயிலில் மார்கழி செவ்வாய்க்கிழமை என்பதால் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 2 மணி பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பெரியபாளையம் அருகே சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. தொடர்ச்சியாக, 6 வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். மார்கழி மாதம் செவ்வாய்க்கிழமையான நேற்று சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.

பொது தரிசனம், 50 ரூபாய், 100 ரூபாய் கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோயிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் வந்து காத்திருப்பு மண்டபம் வழியே கோயிலுக்குள் வந்து சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். புதிய வீடு கட்ட வேண்டும், திருமண தடை நீங்க வேண்டும், அரசியல், ரியல் எஸ்டேட் தொழில் என பல்வேறு வேண்டுதல் நிறைவேறுவதற்காக ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்பமரத்தடியில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தும், செங்கற்களை அடுக்கி வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

The post மார்கழி செவ்வாய் என்பதால் சிறுவாபுரியில் பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Tags :
× RELATED கும்மிடிப்பூண்டி சிப்காட்டில்...