×

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: விவசாய தொழிலாளர் சங்கத்தினர் 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருவள்ளூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிரதாப் சந்திரன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கஜேந்திரன், மாவட்ட பொருளாளர் சரவணன், விவசாய சங்க நிர்வாகிகள் ஆறுமுகம், ராஜா ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதில் விவசாய தொழிலாளர்கள் கலந்துகொண்டு மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மட்டும் குறைவான நாட்களில் வேலை வழங்க உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. எனவே அனைவருக்கும் ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய தொழிலாளர்களின் பாதுகாப்பு அரணாக கொண்டுவரப்பட்ட நல வாரியத்தை மீண்டும் அமல்படுத்திட, உழவர் பாதுகாப்பு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் முதியோர் உதவித்தொகை, பேறு கால உதவி தொகை, இறப்பு கால உதவி தொகை போன்ற நல திட்டங்களுக்கு கடந்த ஜூன் 23ம் தேதிக்கு பிறகு நிதி வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அனைத்து பணியாளர்களுக்கும் உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் வசித்து வருகின்ற குடிமனை இல்லாத அனைவருக்கும் உடனடியாக சிறப்பு குழு அமைத்து கணக்கெடுத்து குடிமனை பட்டா வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். நீர்நிலை புறம்போக்குகளில் குடியிருப்பவர்களை உச்ச நீதிமன்ற தீர்ப்பை காட்டி வீடுகளை இடித்து மக்களை பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்படுவதால், நீர்நிலை புறம்போக்குகளில் குடியிருப்பவர்களுக்கு உரிய குடிமனையும், வீடும் கட்டிக் கொடுத்து அவர்களை பாதுகாக்க வேண்டும் என வழியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

The post கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED கும்மிடிப்பூண்டி சிப்காட்டில்...