×

மாந்தோப்பு வைத்து ஆக்கிரமிப்பு செய்த ரூ.50 கோடி மதிப்பிலான 9.72 ஏக்கர் நிலம் மீட்பு

திருவள்ளூர்: வெங்கத்தூரில் ரூ.50 கோடி மதிப்பிலான 9.72 ஏக்கர் நிலத்தில் மாந்தோப்பு வைத்து ஆக்கிரமிப்பு செய்த நிலம் அதிரடியாக மீட்கப்பட்டது. அந்த இடத்தில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்கள் மற்றும் இருளர் இன மக்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் இலவச வீட்டுமனை வழங்கும் திட்டத்திற்காக மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் ஆலோசனையின் பேரில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், வருவாய் கோட்டாட்சியர் கற்பகம், வட்டாட்சியர் வாசுதேவன் மற்றும் வருவாய்த்துறையினர் வெங்கத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிலத்தை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மண்டல துணை வட்டாட்சியர் நரசிம்மன், வருவாய் ஆய்வாளர் கார்த்திக், கிராம நிர்வாக அலுவலர் கோபி, கிராம உதவியாளர் யோகானந்தம் ஆகியோர் வெங்கத்தூர் ஊராட்சி பகுதிகளில் உள்ள அரசு நிலத்தை ஆய்வு செய்தனர். அப்போது, வெங்கத்தூர் கிராமத்தில் புன்செய் தரிசு வகைப்பாடு புல எண்கள் 570/1 முதல் 8,10,11 மற்றும் 13 முதல் 19 வரை, 577/21,22,23 மற்றும் 587/1 முதல் 19 வரை ஆகிய புல எண்களில் மொத்த விஸ்தீரணம் 3.94.00 ஹெக்டேர் நிலத்தில் (அதாவது 9 ஏக்கர் 72 சென்ட்) தனிநபர் ஒருவர் மாந்தோப்பு வைத்து ஆக்கிரமிப்பு செய்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது உத்தரவின்படி, வருவாய் கோட்டாட்சியர் கற்பகம் மேற்பார்வையில் வட்டாட்சியர் வாசுதேவன் தலைமையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் ‘இந்த நிலம் அரசுக்கு சொந்தமானது, யாரும் மீறி பிரவேசிக்க கூடாது மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய மதிப்பு ரூ.50 கோடி என வட்டாட்சியர் வாசுதேவன் தெரிவித்தார்.

The post மாந்தோப்பு வைத்து ஆக்கிரமிப்பு செய்த ரூ.50 கோடி மதிப்பிலான 9.72 ஏக்கர் நிலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags :
× RELATED கும்மிடிப்பூண்டி சிப்காட்டில்...