மாமல்லபுரம்: கலைஞர் கைவினை திட்டத்தின் மூலம் 25 சதவீத மானியத்துடன் கைவினை கலைஞர்களுக்கு ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், கடனுதவி பெற விண்ணப்பிக்க கைவினை கலைஞர்கள் மாமல்லபுரத்தில் குவிந்தனர். தமிழ்நாடு அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், கலைஞர் கைவினை திட்டம் கடந்த 11ம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில், அதிக பட்சமாக ரூ.50 ஆயிரம் வரை, 25 சதவீதம் மானியத்துடன், ரூ.3 லட்சம் வரை, வங்கி கடன் 5 சதவீத வட்டி மானியத்துடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், விண்ணப்பிக்க 35 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
இந்த நிலையில், மாமல்லபுரத்தில் இருந்து கல்பாக்கம் செல்லும் சாலையில் உள்ள தனியார் சிற்பகலைக் கூடத்தில் நேற்று கைவினை கலைஞர்கள் ரூ.3 லட்சம் வரை கடனுதவி பெறுவதற்கு செங்கல்பட்டு மாவட்ட தொழில் மையம் சார்பில், பொது மேலாளர் வித்யா தலைமையில், 6 பேர் கொண்ட குழுவினர் நேரில் வந்து கைவினை கலைஞர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இதில், சிற்பிகள் தையல் கலைஞர்கள், பொம்மை செய்பவர்கள், மூங்கில் கூடை செய்பவர்கள் மற்றும் கட்டிட தொழிலாளிகள் உள்ளிட்ட பலர் ஆர்வமாக வந்து, புதிய தொழில் தொடங்கவும், செய்யும் தொழிலை விரிவாக்கம் செய்திடவும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்து வருகின்றனர்.
The post கலைஞர் கைவினை திட்டத்தின் மூலம் கடனுதவி பெற விண்ணப்பிக்க குவிந்த கைவினை கலைஞர்கள் appeared first on Dinakaran.