வடசேரி பஸ் நிலையத்தில் கட்டண கழிப்பறை இருந்தது. பராமரிப்பு பணிகள் என கூறி இந்த கட்டண கழிவறை தற்போது மூடப்பட்டு, சீரமைப்பு பணிகள் நடக்கிறது. இதே போல் வடசேரி பஸ் நிலையத்துக்கு வெளியே ஆம்னி பஸ் நிலையம் உள்ளது. அந்த பஸ் நிலையத்தையொட்டி இருந்த கழிவறையையும் பராமரிப்பு பணிகள் என தற்காலிகமாக மூடி உள்ளனர்.
இந்த 2 கழிவறைகளுமே மூடப்பட்டு உள்ளதால் வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள இலவச கழிவறையை பயணிகள் பயன்படுத்துகிறார்கள். இங்கு ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனி கழிவறைகள் உள்ளன. ஆனால் பஸ் நிலையத்துக்கு வரக்கூடிய அனைத்து பயணிகளுமே இதை பயன்படுத்த வேண்டி இருப்பதால், காலை வேளையில் நீண்ட கியூவில் பொதுமக்கள் நிற்கிறார்கள். இதனால் மக்கள் பெரும் அவஸ்தைக்கு உள்ளாகி உள்ளனர்.
வடசேரி பஸ் நிலையத்தையொட்டி வேறு கழிவறைகள் இல்லை. இதனால் பயணிகள் இயற்கை உபாதைக்காக பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது. ஒரே நேரத்தில் இரு கழிவறைகளை இடித்து பராமரிப்பு பணி நடக்கிறது. கழிவறை கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் மேயர் மகேஷ் அவ்வப்போது ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
டிசம்பர் இறுதிக்குள் பணிகள் முடிவடையும் என கூறி இருந்தனர். ஆனால் தற்போது இன்னும் 1 மாதம் வரை ஆகலாம் என கூறப்படுகிறது. இதே போல் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள அண்ணா பஸ் நிலையத்தில் உள்ள கட்டண கழிவறை சீரமைப்பு பணியும் நடந்து வருகிறது. கழிவறை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் பணிகளை வேகப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடசேரி – திருவனந்தபுரம் ரோட்டில், வடசேரி காய்கறி சந்தை அருகே கட்டண கழிவறை கட்டப்பட்டு இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இந்த கழிவறையை திறந்தால் கூட, பயணிகள் சிரமம் குறையும். எனவே இந்த கழிவறையை விரைவில் திறக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
The post வடசேரி, மீனாட்சிபுரம் பஸ் நிலையங்களில் கழிவறைகள் கட்டுமான பணி எப்போது முடிவடையும்?: பயணிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.