மதுராந்தகத்தில் மே 5ம் தேதி வணிகர் அதிகார பிரகடன மாநாடு: விக்கிரமராஜா தலைமையில் நடந்த பொதுக்குழுவில் தீர்மானம்

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலப் பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு வரவேற்றார். பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா ஆண்டறிக்கை வாசித்தார். மாநில தலைமைச் செயலாளர் பேராசிரியர் ஆர்.ராஜ்குமார் தீர்மான உரையாற்றினார். இதில் மாநில கூடுதல் செயலாளர்கள் வி.பி.மணி, எஸ்.ராஜசேகரன், ஆர்.கே.காளிதாஸ், ஏ.கே.வி.எஸ்.சண்முகநாதன், ஆர்.சம்பத்குமார், பி.மகேந்திரவேல், மாநில செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், 2025, மே-5, 42-வது வணிகர் தின மாநில மாநாட்டினை வணிகர் அதிகார பிரகடன மாநாடாக சென்னை அருகில், மதுராந்தகத்தில் நடத்தப்படும். வணிகர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய அரசு ஊழியர்களுக்கு செயல்படுத்தப்படும் வருங்கால வைப்பு நிதி, குடும்பநல நிதி, ஓய்வூதிய நடைமுறைகளை அமல்படுத்துவதற்கான நடைமுறைகளை கட்டாயம் முன்னெடுத்திட வேண்டும். தற்போது அரசுகளின் செயல்பாட்டில் இருக்கும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தின் முடிவுகளை மத்திய அரசு அறிவிப்பதற்கு முன், சட்ட முன்வடிவுகளை கொண்டுவரும் போதும், வரிவிதிப்பில் மாற்றங்கள் கொண்டுவரும் போதும், வணிகர் சங்க அமைப்பின் நிர்வாக பிரதிநிதிகளை அழைத்து கலந்தாய்வு செய்து முடிவெடுத்திட வேண்டும். வாடகை மீதான 18% ஜி.எஸ்.டி வரிவிதிப்பை ரத்து செய்திட மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தலைநகர் டெல்லியில் கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்ட அறிவிப்பை செயல்படுத்தப்படும். மாதாந்திர மின் கட்டண நடைமுறையை தமிழக அரசு அமல்படுத்திட வேண்டும் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post மதுராந்தகத்தில் மே 5ம் தேதி வணிகர் அதிகார பிரகடன மாநாடு: விக்கிரமராஜா தலைமையில் நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: