இலங்கை சிறையிலிருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் சென்னை திரும்பினர்

சென்னை: இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 18 பேர், நேற்று முன்தினம் இரவு இலங்கையிலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னை வந்தனர். நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளை சேர்ந்த 18 மீனவர்கள் விசைப்படகில், கடந்த டிசம்பர் 2ம்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது இலங்கை கடலோர காவல் ரோந்துபடையினரால் கைது செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு இலங்கை நீதிமன்றம், மீனவர்கள் 18 பேரையும் விடுதலை செய்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. மீனவர்கள் 18 பேருக்கும் பாஸ்போர்ட் இல்லாததால், அனைவருக்கும் எமர்ஜென்சி சர்டிபிகேட்கள் தூதரக அதிகாரிகள் வழங்கினர். அதோடு, 18 பேருக்கும் விமான டிக்கெட் ஏற்பாடுகளையும் செய்தனர். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் மீனவர்கள் 18 பேரையும் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர். சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்கள் 18 பேரையும் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

The post இலங்கை சிறையிலிருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் சென்னை திரும்பினர் appeared first on Dinakaran.

Related Stories: