ஐடி நிறுவனத்தை ரூ.2,100 கோடிக்கு வாங்கிய விவகாரம் சிங்கப்பூரின் கெப்பல் ஐடி நிறுவனத்திற்கு சொந்தமான 3 இடங்களில் சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

சென்னை: ஒன் பாராமவுண்ட் ஐடி நிறுவனத்தை ரூ.2,100 கோடிக்கு வாங்கிய விவகாரம் தொடர்பாக சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கெப்பல் ஐடி நிறுவனத்திற்கு சொந்தமான 3 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்ட கெப்பல் ஐடி நிறுவனம் சென்னை போரூரில் 12.5 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான இயங்கி வருகிறது.

இந்த கெப்பல் நிறுவனம், போரூரில் இயங்கி வந்த ஒன் பாராமவுண்ட் என்ற ஐடி நிறுவனத்தை ரூ.2,100 கோடிக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. இதில் பல கோடி ரூபாய் சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்நிலையில் இந்தியாவில் சென்னை போரூரை தலைமையிடமாக இயங்கி வரும் கெப்பல் ஐடி நிறுவனத்திற்கு சொந்தமான நுங்கம்பாக்கம், பெருங்குடியில் உள்ள அலுவலகங்களில் நேற்று துப்பாக்கி ஏந்திய தொழில் பாதுகாப்பு வீரர்களுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

குறிப்பாக போரூரில் உள்ள கெப்பல் ஐடி நிறுவனத்தில் வருவமான வரித்துறை இணை கமிஷனர் தலைமையில் சோதனை நடந்து வருகிறது. அதேபோல் நுங்கம்பாக்கத்தில் உள்ள நிறுவனத்தில் 7 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். பெங்குடியில் உள்ள கேன் பின் ஹோம்ஸ் என்ற நிறுவனத்தில் 6 பேர் கொண்ட அதிகாரிகள் இரவு வரை சோதனை நடத்தினர். இதில் ஒன் பாராமவுண்ட் ஐடி நிறுவனத்தை வாங்கியது தொடர்பான முக்கிய ஆவணங்கள், சந்தை மதிப்பு மற்றும் ஆண்டு வருமானம் உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், 2023-24ம் ஆண்டு தாக்கல் செய்த வருமான வரித்துறை கணக்கு விபரங்களை ஆய்வு செய்து, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இதில், சிங்கப்பூரில் இருந்து சட்டவிரோதமாக பல நூறு கோடி கெப்பல் நிறுவனம் மூலம் இந்தியாவில் முதலீடு செய்யப்பட்டதற்கான ஆவணங்களும் அடங்கும் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் வருமான வரித்துறை சோதனை முடிந்த பிறகுதான் எத்தனை கோடி வருமான வரிஏய்ப்பு செய்துள்ளது என்று முழுமையாக தெரியவரும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஐடி நிறுவனத்தை ரூ.2,100 கோடிக்கு வாங்கிய விவகாரம் சிங்கப்பூரின் கெப்பல் ஐடி நிறுவனத்திற்கு சொந்தமான 3 இடங்களில் சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் appeared first on Dinakaran.

Related Stories: