ஆச்சாள்புரம்- மாதானம் சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த ஆச்சாள்புரத்தில் இருந்து ஆலாலசுந்தரம், கூட்டுமாங்குடி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக மாதானம் செல்லும் சாலையின் குறுக்கே தரைப்பாலம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் அதிக மழை பெய்து வெள்ளப்பெருக்கு மற்றும் பாசன, வடிகால் வாய்க்கால்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது அப்பகுதியில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் தேங்கும் மழைநீர், தரைப்பாலம் வழியே கடந்து வெளியேறி வருகிறது.

வயல்களில் தேங்கிய மழைநீர் சாலையின் குறுக்கே தரைப்பாலத்தின் வழியே வெளியேறும்போது தண்ணீர் அதிகமாக சாலை குறுக்கே வழிந்தோடுவதால் ஆச்சாள்புரத்தில் இருந்து மாதானம், பழையபாளையம், புதுப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் எளிதில் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. வாகனங்களும் சென்றுவர முடியாத நிலையே உள்ளது. வயல்களுக்கு சென்று வரவும், விளை பொருட்களை எடுத்து செல்லவும் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.

எனவே அனைத்து தரப்பு மக்களின் நலன்கருதி ஆச்சாள்புரத்தில் இருந்து மாதானம் செல்லும் சாலை குறுக்கே தரைப்பாலம் அமைந்துள்ள இடத்தில் மேம்பாலம் கட்ட வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஆச்சாள்புரம்- மாதானம் சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: