திருவண்ணாமலை, டிச.10: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா 6ம் நாள் உற்வசம் கோலாகலமாக நடந்தது. அப்போது, வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரரும், வெள்ளி ரதத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரும் பவனிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, கோலாகலமாக நடந்து வருகிறது. அதையொட்டி, தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது.
அதன்படி, கார்த்திகை தீபத்திருவிழா 6ம் நாள் உற்வசம் நேற்று விமரிசையாக நடந்தது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பூஜைகள் நடந்தது. பின்னர், பகல் 11 மணி அளவில், காலை உற்சவம் விமரிசையாக தொடங்கியது. அண்ணாமலையார் திருக்கோயில் ராஜகோபுரம் எதிரே, 16 கால் மண்டபத்தில் இருந்து மேளதாளம் முழங்க, யானை வாகனத்தில் விநாயகரும், வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரரும் எழுந்தருளி மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து, தீபத்திருவிழாவின் பிரசித்தி பெற்ற வெள்ளித் தேரோட்டம் நேற்று இரவு 10 மணியளவில் நடைபெற்றது. திருக்கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் அலங்காரம், தீபாராதனை முடிந்ததும், திட்டி வாசல் வழியாக ராஜகோபுரம் எதிரில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். அப்போது, அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என விண்ணதிர முழங்கினர். பின்னர், வெள்ளி விமானத்தில் விநாயகரும், வெள்ளி விமானத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரும், வெள்ளித் தேரில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரும், இந்திர விமானத்தில் பராசக்தி அம்மனும், வெள்ளி விமானத்தில் சண்டிகேஸ்வரரும் மாட வீதியில் பவனி வந்தனர்.
எழில்மிகு வண்ண மின்னொளி மற்றும் மலர் அலங்காரத்தில் ஜொலித்த வெள்ளி ரதத்தில், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருளி பவனி வந்த அருட்காட்சியை தரிசிக்க, குளிரையும், மழையையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நள்ளிரவு வரை மாட வீதியில் வரை திரண்டிருந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு கடந்த 1907ம் ஆண்டு வெள்ளித் தேர் நாட்டுக்கோட்டை நகரத்தாரால் காணிக்கையாக அளிக்கப்பட்டது. அப்போது முதல், தீபத்திருவிழா 6ம் நாள் விழாவில் வெள்ளித் தேர் பவனி நடைபெறுகிறது. இந்த ஆண்டு வெள்ளித் தேர் சக்கரங்கள் சீரமைக்கப்பட்டன. ஏற்கனவே இருந்த மர சக்கரங்கள் மாற்றப்பட்டு, இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டன. அதன்படி, திபத்திருவிழாவில் நூற்றாண்டு கடந்த வெள்ளித் தேர் நேற்று இரவு 117வது ஆண்டாக மாட வீதியில் பவனி வந்தது குறிப்பிடத்தக்கது.
The post வெள்ளி ரதத்தில் அண்ணாமலையார் பவனி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் தி.மலை தீபத்திருவிழா 6ம் நாள் உற்சவம் கோலாலகம் appeared first on Dinakaran.