திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே உல்லாசமாக இருக்க மறுத்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற 2 கள்ளக்காதலர்கள் கைது செய்யப்பட்டனர். திருப்பத்தூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. இளம்பெண்ணின் கணவர் பெங்களூருவில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். மாதத்திற்கு ஒருமுறை வீட்டுக்கு வந்து செல்வாராம். வீட்டில் தனியாக வசித்து வந்த இளம்பெண், அதே பகுதியில் உள்ள மகளிர் சுயஉதவி குழுவினரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 11ம் தேதி கடன் தொகையை வசூலிக்க மகளிர் சுயஉதவி குழுவினர் வந்துள்ளனர். அப்போது, அவரது வீட்டின் கதவுகள் திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் அரை நிர்வாண நிலையில் ரத்தக்காயங்களுடன் இளம்பெண் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.தகவலறிந்து கந்திலி போலீசார் சடலத்தை மீட்டு மர்மச்சாவு என வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இளம்பெண்ணின் செல்போனை கைப்பற்றி அவருடன் பேசியவர்கள் விவரங்களை சேகரித்தனர். அதில் 2 எண்களில் இருந்து அடிக்கடி அழைப்புகள் வந்தது தெரிந்தது. இதுதொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில், அதே பகுதியை சேர்ந்த குமரேசன்(26), விக்னேஷ்(25) ஆகிய 2 பேரின் செல்போனில் இருந்து அடிக்கடி அழைப்புகள் வந்தது தெரிந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.கொலையான இளம்பெண்ணுக்கும், குமரேசனுக்கும் கடந்த 7 ஆண்டுகளாக தகாத உறவு இருந்துள்ளது. இளம்பெண்ணின் கணவர் மாதம் ஒருமுறை மட்டுமே வீட்டுக்கு வருவதால் இதனை தனக்கு சாதகமாக்கி இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இதனிடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குமரேசன் சிங்கப்பூர் சென்றுவிட்டார். பின்னர், விக்னேசுடன் இளம்பெண்ணுக்கு தகாத உறவு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி ஜாலியாக இருந்துள்ளனர். மேலும், அடிக்கடி பைக்கில் வெளியே சுற்றி வந்துள்ளனர். இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு குமரேசன் ஊர் திரும்பினார். அப்போது தனது கள்ளக்காதலிக்கும், விக்னேசுக்கும் தொடர்பு இருந்த தகவல் தெரிந்தது. இதனால், இளம்பெண் மீது ஆத்திரமடைந்தார். கடந்த 10ம் தேதி இளம்பெண்ணின் வீட்டுக்கு குமரேசன் சென்றுள்ளார். அங்கு அவரை தனிமையில் இருக்க அழைத்துள்ளார். ஆனால் இளம்பெண் மறுத்துள்ளார்.அப்போது அவரிடம், `உனக்கும் விக்னேஷூக்கும் தொடர்பு இருப்பது தெரியும். இதனால்தான் என்னை நீ தவிர்க்கிறாய்’ எனக்கூறி வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் இளம்பெண்ணை குமரேசன் சரமாரி தாக்கியுள்ளார். இதில் மயங்கி விழுந்த அவருடன் வலுக்கட்டாயமாக உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர், குமரேசன் அங்கிருந்து சென்றுள்ளார். அவர் சென்ற சிறிது நேரம் கழித்து நள்ளிரவு விக்னேஷ் அங்கு வந்துள்ளார். அவரும் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார். ஆனால், தனக்கு உடல் நலம் சரியில்லை எனக்கூறி அவர் மறுத்துள்ளார். இதனை ஏற்க மறுத்த விக்னேசும் இளம்பெண்ணை சரமாரி தாக்கிவிட்டு உல்லாசமாக இருந்துள்ளார். இதில் அவர் மூச்சுத்திணறி இறந்துள்ளார். இதையடுத்து குமரேசன், விக்னேஷ் ஆகிய இருவரும் எதுவும் நடக்காதது போல் தலைமறைவாகிவிட்டனர் என்ற தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து குமரேசன், விக்னேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிந்து இருவரையும் நேற்று கைது செய்தனர். பின்னர், இருவரையும் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
The post இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற 2 கள்ளக்காதலர்கள் கைது: உல்லாசத்துக்கு மறுத்ததால் கொடூரம் appeared first on Dinakaran.