×

தீபத் திருவிழாவில் குதிரைச் சந்தை

திருவண்ணாமலை தீபத் திருவிழாவின் சிறப்புகளில் ஒன்றாகத் திகழ்வது இங்கு நடைபெறும் பாரம்பரிய குதிரைச் சந்தை. நூற்றாண்டுகள் பழமையான இந்த சந்தை, இன்றைக்கும் பழமை மாறாமல் தொடர்வது வியப்பாகும்.

வாகன வசதிகள் அவ்வளவாக இல்லாத காலங்களிலும், நூற்றுக்கணக்கான மைல் தொலைவில் இருந்து ஏராளமான மக்கள் திருவண்ணாமலைக்கு நடந்து வந்து, தீபத்தை தரிசித்துள்ளனர். இப்போதும், இந்த மரபை மாற்றாமல் பின்பற்றுவோர் உண்டு. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தீபவிழாவைத் தரிசித்துவிட்டு, ராஜகோபுரத்தின் எதிரில் உள்ள மண்டபங்களில் இரவு தங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தீபவிழாவைத் தரிசிக்க வரும் பக்தர்கள், குதூகலமாகச் சென்று ரசிக்கும் இடங்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது குதிரைச் சந்தை.

தீபத் திருவிழாவின் 7ம் நாள் தேரோட்டம் நடைபெறும் நாளில் குதிரைச் சந்தை தொடங்கி தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

கிரிவலப் பாதையில் சிங்கமுக தீர்த்தம் அருகே (அரசு கலைக்கல்லூரி எதிரில்) குதிரைச் சந்தை நடைபெறும். மலையடிவாரத்தில் இயற்கையான சூழலில் இந்தச் சந்தை நடப்பது பேரழகு.

புதுக்கோட்டை, தஞ்சை, ஈரோடு, பன்னாரி, அந்தியூர், வேலூர், சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில இருந்தும் குதிரைகளை விற்பனைக்காக இந்தச் சந்தைக்குக் கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் அந்தியூர் குதிரைச் சந்தைக்கு அடுத்ததாக, மிகப்பெரிய அளவில் நடைபெறும் குதிரைச் சந்தையாக திருவண்ணாமலை தீபத் திருவிழா சந்தை இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக குதிரை களின் வரத்து படிப்படியாகக் குறைந்துவிட்டது.

இந்தச் சந்தையில் குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரத்தில் தொடங்கி ரூ. 5 லட்சம் மதிப்புள்ள குதிரைகளை விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர். சிலற் விற்பனை செய்யாவிட்டாலும், தீபத் திருவிழா சந்தைக்கு தங்கள் குதிரைகளைக் கொண்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளவர்களும் உண்டு. இந்தச் சந்தையில் குதிரைகளை வாங்கும் வாடிக்கையாளர்களைவிட, வியப்புடன் பார்வையிடும் பார்வையாளர்களின் கூட்டம் அதிகம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் குதிரை வண்டிகளின் பயன்பாடு சமீப காலம் வரை இருந்தது. தற்போது, மணமக்கள் அழைப்பு, விழாக்கள் போன்றவற்றில் மட்டுமே குதிரைகளின் பயன்பாடு காணப்படுகிறது.

குதிரை வண்டிகளின் பயன்பாடு முற்றிலுமாகக் குறைந்துவிட்ட நிலையிலும், பாரம்பரியம் மாறாத குதிரைச் சந்தை தொடர்ந்து நடப்பது சிறப்பு. சமீபகாலமாக குதிரைகளின் வரத்து குறைந்துவிட்ட நிலையில், இந்தப் பகுதியில் நடைபெறும் மாட்டுச் சந்தை வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஆனாலும் தீபவிழா எளிய ‘மக்களின் விழா’ என்பதன் அடையாளமாக, பாரம்பரிய விழாவாகத் திகழ்வதற்கு குதிரைச் சந்தை சான்றாக அமைந்திருக்கிறது.

The post தீபத் திருவிழாவில் குதிரைச் சந்தை appeared first on Dinakaran.

Tags : Horse ,market ,Deepam festival ,Tiruvannamalai Deepam festival ,
× RELATED மலை மீது புனிதநீர் தெளித்து...