கோபி தலைமை அஞ்சலகத்துடன் கிளை தபால் நிலையங்களை இணைக்க வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு

கோபி : கோபி தலைமை தபால் அலுவலகத்துடன் மற்ற கிளை அஞ்சல் அலுவலகங்களை இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.கோபி தலைமை தபால் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் புதுப்பாளையம்,தெற்கு மற்றும் வடக்கு அஞ்சல் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தலைமை தபால் அலுவலகம், தனியார் கட்டிடத்தில் வாடகை உயர்வு காரணமாக ல.கள்ளிப்பட்டி பிரிவில் இருந்து நாகர்பாளையம் சாலையில் உள்ள அஞ்சல் அலுவலர்கள் குடியிருப்புக்கு மாற்றப்பட்டது.இங்குள்ள 24 குடியிருப்புகளில் 14 தலைமை அஞ்சல் அலுவலகத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் பதிவு தபால்,பார்சல்,விரைவு தபால் பிரிவு,போஸ்ட்மேன் டெலிவரி மெயில் பிரிவு,அஞ்சலக ஆயுள் காப்பீடு பிரிவு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு பிரிவு, சென்ட்ரல் பிராசசிங் சென்டர்,அஞ்சல் ஆய்வாளர் அலுவலகம், ரயில் டிக்கெட் புக்கிங்,ஆதார் சேவை,மணி ஆர்டர்,பிசினஸ் போஸ்ட்,இன்டர்நேஷனல் மெயில் சர்வீஸ் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதுப்பாளையத்தில் செயல்பட்டு வந்து கிளை அஞ்சலகத்தில் புதுப்பாளையம், மேட்டுவலுவு, ராஜ வீதி, முத்து வேலப்பன் வீதி, நாய்க்கன்காடு, கரட்டூர், பார்வதி நகர், டி.ஆர்.நகர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின்சேமிப்பு, காப்பீடு என பல்வேறு சேவைகளை பெற்று வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதுப்பாளையம் கிளை அஞ்சல் அலுவலகமும் தலைமை தபால் அலுவலக வளாகத்திற்கு மாற்றப்பட்டது.இதனால் புதுப்பாளையம் கிளை அஞ்சலக வாடிக்கையாளர்கள் சுமார் 3 கி.மீ தூரம் பயணம் செய்து அஞ்சல் அலுவலகம் வர வேண்டிய நிலை உள்ளது.

அதே போன்று கோபி தெற்கு மற்றும் கோபி வடக்கு கிளை அஞ்சல் அலுவலகங்களையும் இதே பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் கிளை அஞ்சல் அலுவலகங்களில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் பெரிதும் அவதிப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இதனால் புதுப்பாளையம் கிளை அஞ்சல் அலுவலகத்தை மீண்டும் புதுப்பாளையம் பகுதிக்கே இட மாற்றம் செய்வதோடு மற்ற கிளை அஞ்சல் அலுவலகங்களை தலைமை தபால் அலுவலக வளாகத்திற்கு இடமாற்றம் செய்வதை கைவிட வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

அஞ்சல் அலுவலக சேவைகள் முற்றிலும் சேவை அடிப்படையில் செய்யப்படும் நிலையில், நிரந்தர வைப்பு நிதி, ஆயுள் காப்பீடு, சேமிப்பு கணக்கிற்கு வட்டி அதிகம், முதலீட்டு தொகைக்கு பாதுகாப்பு போன்ற காரணங்களால் மட்டுமே இன்றும் அதிக வாடிக்கையாளர்கள் உள்ளனர். எனவே பொதுமக்கள் வசதிக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்றும் நிர்வாக காரணங்களுக்காக லாப நோக்குடன் செயல்படும் நிறுவனமாக செயல்படக்கூடாது என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

The post கோபி தலைமை அஞ்சலகத்துடன் கிளை தபால் நிலையங்களை இணைக்க வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: