ஈரோடு,டிச.13: ஈரோட்டில் நேற்று அதிகாலை முதல் மாலை வரை சாரல் மழை நீடித்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்க கடலின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை பெஞ்சல் புயலாக உருவெடுத்து பலத்த மழை பெய்தது.இதனால், சென்னை,கடலூர், நாகை மற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து, விவசாய நிலங்களும்,குடியிருப்பு பகுதிகளும் மழை நீரில் மூழ்கின.
அதனைத் தொடர்ந்து,புயல் கரையை கடந்து சுமார் ஒரு வாரம் ஆன நிலையில் நேற்று முதல் வங்கக்கடலில்,இலங்கை கடல் பகுதியில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை,விழுப்புரம்,திருவாரூர்,புதுக்கோட்டை,கடலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு,கரூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதல் லேசானது முதல் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்பட்டது.
தொடர்ந்து, வரும் 17ம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், ஈரோட்டிலும் நேற்று அதிகாலை முதல் லேசான மழை பெய்தது. சுமார் 8 மணி வரை லேசாக பெய்த மழை அதனைத் தொடர்ந்து சாரல் மழையாக மாறி அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வந்தது வானம் இருண்டு மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சாரல் மழையில் நனைந்தவாரே பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சென்றனர். அலுவலகம் செல்பவர்களும் மழையில் நனைந்தவாரே சென்றனர்.
The post ஈரோட்டில் சாரல் மழை appeared first on Dinakaran.