சிதம்பரம், டிச. 10: கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயில் சித் சபையை பக்தர்கள் 108 முறை வலம் வந்து வழிபட்டனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு பக்தர்கள், பொதுமக்கள் அதிக அளவில் வந்து கோயிலில் உள்பிரகாரம், வெளிப்பிரகாரம் பகுதிகளில் வலம் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் நேற்று கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு, நேற்று அதிகாலை முதல் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர்.
குறிப்பாக பெண்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற கோயில் கொடிமரத்துடன் சேர்ந்த சித்சபையை 108 முறை வலம் வந்து பயபக்தியுடன் வழிபட்டனர். சிலர் 21, 54 என்ற எண்ணிக்கை முறையிலும் வலம் வந்தனர். தொடர்ந்து உள்ளூர் பக்தர்கள், வெளியூர் பக்தர்கள், வெளிமாவட்டம், வெளிமாநிலம், வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். அதேபோல் நடராஜர் கோயிலுக்குள் இருக்கும் ஆதிமூலநாதர் சுவாமியை தரிசனம் செய்து, அங்கும் வெளிப்பிரகாரத்தில் 108 முறை சுற்றி வந்தனர்.
பின்னர் சிவகாம சுந்தரி அம்மன் சன்னதியில் தரிசனம் செய்தனர். அங்கு உள் பிரகாரம், வெளி பிரகாரத்திலும் வலம் வந்து அம்பாளை வழிபட்டனர். நடராஜர் கோயிலுக்கு அதிகாலை முதல் அதிகளவு பக்தர்கள் வந்திருந்ததால், நான்கு வீதிகளிலும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதேபோல் கோயில் உள் பிரகாரம், வெளிப்பிரகாரம் மற்றும் சிவகங்கை தீர்த்த குளம், கீழ சன்னதி வழி, மேல சன்னதி, வடக்கு சன்னதி உள்ளிட்ட இடங்களிலும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பாதுகாப்பு பணியில் சிதம்பரம் நகர போலீசார் ஈடுபட்டனர்.
The post சிதம்பரம் நடராஜர் கோயில் சித் சபையை 108 முறை வலம் வந்த பக்தர்கள் appeared first on Dinakaran.