இந்து ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 140வது ஆண்டு விழா

மதுராந்தகம்: மதுராந்தகம் நகரில் உள்ள இந்து ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் 140வது ஆண்டு விழா நடைபெற்றது. மதுராந்தகம் நகரில் மிகவும் பழமையான பள்ளியாக இந்து ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திகழ்ந்து வருகிறது. இந்த பள்ளி ஆங்கிலேயர்கள் ஆட்சி காலம் தொட்டு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த பள்ளியின் 140வது ஆண்டு விழா நேற்றுமுன்தினம் கொண்டாடப்பட்டது. அரசு உதவி பெறும் பள்ளியாக செயல்பட்டு வரும் இந்த பள்ளியின் கல்வி குழு தலைவர் ஸ்ரீராம் சுப்ரமண்யா இந்த விழாவிற்கு தலைமை தாங்கினார். கல்வி குழு துணை தலைவர் அனுராதா ஸ்ரீராம் முன்னிலை வகித்தார். இதற்கு முன்னதாக பள்ளி செயலாளர் ராஜாராம் அனைவரையும் வரவேற்றார்.

இந்த விழாவின்போது, பள்ளிக்குழு தலைவர் பேசுகையில், ‘இந்த பள்ளி அடுத்த பத்து ஆண்டுகளில் 150வது ஆண்டு விழா கொண்டாடும்போது மாவட்ட மற்றும் மாநில அளவில் மாதிரி பள்ளியாக விளங்க வேண்டும். இப்பகுதி மாணவர்களுக்கு சிறந்த கல்வியை கொடுப்பதன் மூலம் இளைய சமுதாயத்தை மிகச் சிறப்பானதாக கட்டமைக்க முடியும் என பேசினார். இந்த விழாவின்போது, இப்பள்ளியின் 140 ஆண்டுகால வரலாறு குறித்த ஆவண குறும்படம் வெளியிடப்பட்டது. மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றுகளும் வழங்கப்பட்டன. விழாவின்போது, இப்பள்ளியின் முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்கள், தங்களின் பழமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இதில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சத்யகுமார் பள்ளி தலைமை ஆசிரியர் பாபு மற்றும் ஆசிரியர்கள், பள்ளி அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

The post இந்து ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 140வது ஆண்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: