×

அதானி லஞ்சம் கொடுத்த விவகாரம் இந்தியாவின் மதிப்பை குலைக்க பண உதவியா?: பாஜ குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு

புதுடெல்லி: இந்தியாவின் மதிப்பை குலைக்க பண உதவி செய்வதாக பா.ஜ தெரிவித்த குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தொழில் அதிபர் அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட விவகாரம் தற்போது நாடாளுமன்றத்தை முடக்கி வருகிறது. இந்த நிலையில் வெளிநாட்டு தொழில் அதிபர் ஜார்ஜ் சோரஸ், ராக்பெல்லர் அறக்கட்டளை, ஓசிசிஆர்பி உள்ளிட்ட அமைப்புகளுடன் காங்கிரஸ் இணைந்து இந்தியாவின் நற்மதிப்பை கெடுப்பதாகவும், ராகுல்காந்திக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் பா.ஜ குற்றம்சாட்டியது.

இந்த குற்றச்சாட்டை நாடாளுமன்றத்தில் பா.ஜ எழுப்பியதால் மீண்டும் அமளி ஏற்பட்டது. இதுதொடர்பாக பா.ஜ தனது எக்ஸ் தளத்தில்,’ உண்மையில் அமெரிக்க புலனாய்வு இதழான ஓசிசிஆர்பியின் நிதியுதவியில் 50% நேரடியாக அமெரிக்க வெளியுறவுத் துறையிலிருந்து வருகிறது. எனவே ஓசிசிஆர்பியின் செயல்களை அமெரிக்க வெளியுறவுத்துறை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது. மேலும் ஓ.சி.சி.ஆர்.பி என்ற ஊடக நிறுவனத்தை அமெரிக்க அரசு கட்டுப்படுத்துகிறது என்று ஒரு பிரெஞ்சு புலனாய்வுப் பத்திரிக்கையாளர் வெளிப்படுத்தியுள்ளார். அதற்கும் காங்கிரசுக்கும், என்ன தொடர்பு?’ என்று கேள்வி எழுப்பியுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை மீதான பா.ஜவின் குற்றச்சாட்டை அமெரிக்க அரசு நேற்று மறுத்துள்ளது. அமெரிக்க தூதரக செய்தி தொடர்பாளர் இதுபற்றி கூறுகையில்,’ இந்தியாவில் ஆளும் கட்சி இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது. உண்மையில் அமெரிக்காவில் பத்திரிகையாளர்களுக்கான தொழில்முறை மேம்பாடு மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சியை ஆதரிக்கும் திட்டத்தில் அமெரிக்க அரசு, தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது.

இந்த திட்டத்தின்படி, அந்த நிறுவனங்களின் தலையங்க முடிவுகள் அல்லது கட்டுரைகளில் அமெரிக்க அரசு ஆதிக்கம் செலுத்துவது இல்லை. அமெரிக்கா நீண்ட காலமாக உலகெங்கிலும் உள்ள ஊடக சுதந்திரத்தின் சாம்பியனாக இருந்து வருகிறது. சுதந்திரமான பத்திரிகை எந்த ஜனநாயகத்தின் இன்றியமையாத அங்கமாகும். இதன் மூலம் ஆக்கபூர்வமான விவாதத்தை அமெரிக்கா செயல்படுத்துகிறது. மேலும் அதிகாரத்தில் உள்ளவர்களை பொறுப்புக்கூற வைக்கிறது’ என்று கூறினார்.

The post அதானி லஞ்சம் கொடுத்த விவகாரம் இந்தியாவின் மதிப்பை குலைக்க பண உதவியா?: பாஜ குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Adani ,India ,US ,BJP ,New Delhi ,United States ,Parliament ,
× RELATED அதானி விவகாரத்தில் போராட்டம் கண்ணீர்...