×

அரியானாவில் பயங்கரம்; போதை பொருள் கும்பலிடம் வாக்குவாதம் 11ம் வகுப்பு மாணவன் கொடூர கொலை

பரீதாபாத்: அரியானாவில் போதை பொருள் கும்பலிடம் வாக்குவாதம் செய்த 11ம் வகுப்பு மாணவன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டான். இது தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அரியானாவின் பரீதாபாத் நகரில் வசித்து வந்தவன் அன்ஷுல். அதே பகுதியில் 11ம் வகுப்பு படித்து வந்தான். இவன், நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள சந்தைக்கு சென்றுள்ளான். அப்போது ஹிமான்ஷு மாத்தூர், ரோகித் தமா ஆகியோர் கூட்டாளிகளுடன் வந்து ஆயுதங்களால் அன்ஷுலை கடுமையாக தாக்கியுள்ளனர்.

குறிப்பாக கத்தியால் 14 முறை உடலில் குத்தியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தபடி கீழே சாய்ந்தான் அன்ஷுல். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது சகோதரி அஞ்சலி மற்றும் உடனிருந்தவர்கள் உடனடியாக ஓடி வந்து அன்ஷுலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் வழியிலேயே அவன் உயிரிழந்து விட்டான். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதற்கிடையில் மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து அவனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், ‘சில நாட்களுக்கு முன் கொலை மிரட்டல் பற்றி போலீசாரிடம் கூறியபோது, அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. நாங்கள் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் சிரித்து மகிழ்ந்தனர்’ என்று ஆவேசமாக கூறினர். மேலும், அன்ஷுலின் நண்பர் அன்மோல் கூறும்போது, ‘குற்றவாளிகள் பஸ்லேவா காலனி பகுதியில் அடாவடித்தனத்தில் ஈடுபட்டதுடன் போதை பொருட்களை விற்கும் வழக்கம் கொண்டவர்கள்.

அந்த பகுதி பெண்கள், சிறுமிகளிடம் தவறாக நடந்து கொள்வதும் வழக்கம். சில நாட்களுக்கு முன் அன்ஷுல், அந்த நபர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கு பழி வாங்கவே இந்த சம்பவம் நடந்துள்ளது’ என்று போலீசாரிடம் கூறியுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

The post அரியானாவில் பயங்கரம்; போதை பொருள் கும்பலிடம் வாக்குவாதம் 11ம் வகுப்பு மாணவன் கொடூர கொலை appeared first on Dinakaran.

Tags : Haryana ,Faridabad ,Anshul ,
× RELATED போதைப்பொருள் தடுப்பில் முன்னுதாரணமாக...