பத்திரப்பதிவு ஆபீசுக்குள் புகுந்து சார்பதிவாளரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயற்சி: டிராவல்ஸ் அதிபர் வெறிச்செயல்; அமைச்சரின் உத்தரவால் உடனடி கைது


கருங்கல்: குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள சுண்டவிளையை சேர்ந்தவர் ஜஸ்டஸ் மார்ட்டின் (57). டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவரது சகோதரருக்கு சொந்தமான கருங்கல் காவல் நிலையம் அருகே உள்ள சுமார் 1 சென்ட் நிலத்தை, ஜஸ்டஸ் மார்ட்டின் விலைக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. இதை பத்திரப்பதிவு செய்து தர கோரி ஜஸ்டஸ் மார்ட்டின், நேற்று முன்தினம் கருங்கல் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு சார்பதிவாளர் அரிகிருஷ்ணனிடம், 1 சென்ட் நிலத்தை பதிவு செய்து தருமாறு கூறி உள்ளார். அப்போது சார்பதிவாளர் அரிகிருஷ்ணன், ஜஸ்டஸ் மார்ட்டினிடம், புதிய விதிமுறைகள் அமலின் படி உங்கள் நிலத்தை நேரடியாக பதிவு செய்ய முடியாது. மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் இருந்து ஆய்வு நடத்தி அறிக்கை தந்த பின் தான், பதிவு செய்து தர முடியும் என கூறி உள்ளார்.

இந்த நிலையில் நேற்று மீண்டும் ஜஸ்டஸ் மார்ட்டின், சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று சார்பதிவாளர் அரிகிருஷ்ணனை சந்தித்து தனது நிலத்தை பதிவு செய்து தருமாறு கூறி உள்ளார். அப்போது அரிகிருஷ்ணன், ஏற்கனவே உங்களிடம் தெளிவாக கூறி விட்டேன். மீண்டும், மீண்டும் வந்து என்னை தொந்தரவு செய்ய கூடாது என கூறினார். இதனால் ஆத்திரத்தில் வெளியே சென்ற ஜஸ்டஸ் மார்ட்டின், மீண்டும் சிறிது நேரம் கழித்து ஆவேசத்துடன் சார்பதிவாளர் அலுவலகத்துக்குள் வந்து, பாட்டிலில் கொண்டு வந்த பெட்ரோலை சார்பதிவாளர் அரிகிருஷ்ணன் மற்றும் அவரை சுற்றி இருந்தவர்கள் மீது ஊற்றினார். பின்னர் தனக்கு தானே தலையில் ஊற்றினார். உடனே தீப்பெட்டியை எடுத்து ஜஸ்டஸ் மார்ட்டின் பற்ற வைத்தார். அதிர்ஷ்டவசமாக தீ பிடிக்க வில்லை. உடனடியாக மற்றவர்கள் அங்கிருந்து சுற்றி வளைத்து ஜஸ்டஸ் மார்ட்டினை பிடித்தனர்.

இத்தகவல் அறிந்த அமைச்சர் மூர்த்தி, தென்மண்டல போலீஸ் ஐஜி பிரேம் ஆனந்த சின்காவை தொடர்புகொண்டு ேபசினார். இதையடுத்து அவர் உடனடி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து விரைந்து வந்த போலீசார் ஜஸ்டஸ் மார்ட்டினை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர். பின்னர் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.

The post பத்திரப்பதிவு ஆபீசுக்குள் புகுந்து சார்பதிவாளரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயற்சி: டிராவல்ஸ் அதிபர் வெறிச்செயல்; அமைச்சரின் உத்தரவால் உடனடி கைது appeared first on Dinakaran.

Related Stories: