தனியார் நிறுவன ஊழியரை கடத்தி ரூ.20 லட்சம் பறிப்பு மேலும் ஒரு காவலர் சிக்கினார்: வருமான வரித்துறை அதிகாரிகள் உள்பட 4 பேரை 5 நாள் காவலில் எடுக்க முடிவு

சென்னை: தனியார் நிறுவன ஊழியரை காரில் கடத்தி ரூ.20 லட்சம் பறித்த வழக்கில், மேலும் ஒரு காவலரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த தொழிலதிபர் ஜூனைத் அகமது தனது ஊழியரான சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முகமது கவுஸ் என்பவரிடம் ரூ.20 லட்சம் பணம் கொடுத்து தனது நிறுவனத்திற்கு சி.டி.ஸ்கேன் வாங்க அனுப்பி உள்ளார்.

அதன்படி, கடந்த 16ம் தேதி இரவு முகமது கவுஸ் திருவல்லிக்கேணியில் உள்ள ஹரீஷ் என்பவரிடம் ரூ.10 லட்சம் கொடுக்க வந்த போது, சீருடையில் இருந்த திருவல்லிக்கேணி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாசிங் வழிமறித்து, இது ஹவாலா பணமா என கூறி வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் தாமோதரன், பரதீப், பிரபு ஆகியோர் உதவியுடன் காரில் கடத்தி மிரட்டி ரூ.20 லட்சத்தை பறித்து சென்றனர்.

இதுதொடர்பாக முகமது கவுஸ் அளித்த புகாரின்படி திருவல்லிக்கேணி போலீசார் சிசிடிவி ஆதாரங்களின்படி, சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங் மற்றும் வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடம் நடத்திய விசாரணையில், சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங்குடன் பணியாற்றிய மற்றொரு காவலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையம் வழியாக கடத்தி வரும் தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை வெளிநாட்டு முகவர்கள் மூலம் குறைந்த விலைக்கு கடத்தி வர நூற்றுக்கணக்கான குருவிகள் கமிஷன் அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இதுகுறித்து தகவல் பல ஆண்டுகளாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங்குக்கு தெரியும்.

அதேபோல் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக ஹவாலா பணத்தை அனுப்பும் குருவிகள் குறித்த விவரங்களும் ராஜா சிங்கிற்கு தெரியும். இதனை சாதகமாக பயன்படுத்தி வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் தாமோதரன், பிரதீப், பிரபு உதவியுடன் சோதனை என்று குருவிகளை மிரட்டி பல கோடி மதிப்பு தங்க கட்டிகள், பல லட்சம் ஹவாலா பணத்தை பறித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த மோசடிக்கு திருவல்லிக்கேணியில் பணியாற்றும் மற்றொரு காவலருக்கு நேரடியாக தொடர்பு இருப்பதும் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் நடத்திய விசாரணையின் மூலம் உறுதியாகி உள்ளது. அதேநேரம் இருவரும் இதுபோன்ற வழக்குகளில் சிக்கி உயர் அதிகாரிகள் விசாரணைக்கு உட்பட்டவர்கள் என்பதும் தெரிந்தது.

மேலும் ராஜா சிங்குடன் பணியாற்றிய மற்றொரு காவலரை போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர். சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங் மற்றும் 3 வருமான வரித்துறை அதிகாரிகளை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

* எஸ்.எஸ்.ஐ. சஸ்பெண்ட்
தனியார் நிறுவன ஊழியரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேருடன் இணைந்து காரில் கடத்தி ரூ.20 லட்சம் பணம் பறித்த வழக்கில் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங்கை போலீசார் கைது செய்துள்ளனர். அவருக்கு எதிராக சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்கள் வலுவாக இருப்பதால், போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

The post தனியார் நிறுவன ஊழியரை கடத்தி ரூ.20 லட்சம் பறிப்பு மேலும் ஒரு காவலர் சிக்கினார்: வருமான வரித்துறை அதிகாரிகள் உள்பட 4 பேரை 5 நாள் காவலில் எடுக்க முடிவு appeared first on Dinakaran.

Related Stories: