* 90 ஆண்டு பழைய விமானச்சட்டத்திற்கு பதில் புதிய சட்டம் நிறைவேற்றம்
நமது நாட்டில் உள்ள 90 ஆண்டுகள் பழமையான விமானச் சட்டத்தை மாற்றுவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா கடந்த ஆக.9ல் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. நேற்று பாரதிய வாயுயான் விதேயக் 2024 சட்டம் மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. 1934ல் கொண்டு வந்த சட்டத்தில் 21 திருத்தங்கள் செய்யப்பட்டு புதிய மசோதாவை சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் கே ராம்மோகன் நாயுடு தாக்கல் செய்தார்.
* பிரதமர் ஓடிவிடுகிறார்: பிரியங்கா
அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் பிரதமர் மோடி ஓடி விடுகிறார் என்று பிரியங்கா காந்தி தெரிவித்தார். இதுதொடர்பாக பிரியங்கா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,’ அதானி மெகா ஊழல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று நாட்டு மக்கள் விரும்புகிறார்கள். இந்திய கூட்டணியின் அனைத்துக் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோருகின்றன. ஆனால் பிரதமர் மோடியும், ஒன்றிய அரசும் தொடர்ந்து விவாதத்தில் இருந்து தப்பி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அனைத்து விதிமுறைகளையும் மீறி அதானியின் ஊழலை பிரதமர் பாதுகாக்கும் விதம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இன்று, சக எம்.பி.க்களுடன் சேர்ந்து, நான் இந்த பிரச்னையை பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தேன்’ என்றுகுறிப்பிட்டுள்ளார்.
* ராகுல்காந்தியை துரோகி என்பதா?
ராகுல்காந்தியை துரோகி என்று கூறிய பா.ஜ எம்பி சம்பித் பத்ரா மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, மக்களவை தலைவர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில்,’ டிச.5 அன்று டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பா.ஜ எம்பி சம்பித் பத்ரா கூறுகையில் ராகுல்காந்தி உயர்ந்த பதவியில் இருக்கும் துரோகி என்று சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை என்று கூறிய விதம் மிகவும் பொருத்தமற்ற, அவமரியாதையான நடத்தை ஆகும். இதுபோன்ற நடத்தை நாடாளுமன்றத்தின் நற்பெயருக்கு களங்கம் மட்டுமல்ல, உயர் அரசியலமைப்பு பதவியின் கண்ணியத்தையும் அவமதிக்கிறது. நாடாளுமன்றத்தின் பாதுகாவலர் என்ற முறையில், சம்பித் பத்ரா மீது உடனடியாகவும் கடுமையான நடவடிக்கையும் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் இந்த விஷயத்தை தீவிரமாக அணுகுவீர்கள் என்று நான் நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
* பா.ஜ எம்பி நிஷிகாந்த் துபே மன்னிப்பு கேட்க வேண்டும்
அமெரிக்க தொழில் அதிபர் ஜார்ஜ் சோரசுடன், ராகுல்காந்தியை தொடர்புபடுத்தி பேசியதற்காக காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறும்போது, ‘உபி மாநிலம் சம்பல் செல்ல ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் எழுப்பியபோது, மக்களவையில் மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்தது, பூஜ்ஜிய நேரத்தில் துபே பேசுவதற்கு சபாநாயகர் அனுமதித்தார். அவர் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, வயநாடு எம்பி பிரியங்கா, ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மிகவும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.
இதுபோன்ற தரக்குறைவான கருத்துக்கள் ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை. நாங்கள் மிகவும் வேதனையடைந்துள்ளோம். அதானியின் ஏஜெண்டுகளுக்கு அவதூறு மற்றும் துஷ்பிரயோகம் செய்யும் ஒரே ஒரு பணி மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. நிஷிகாந்த் துபே தனது கருத்தை வாபஸ் பெற்று மன்னிப்பு கேட்பதை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உறுதி செய்ய வேண்டும்’ என்றார். அதானிக்கு எதிராக ராகுல் காந்தி பேசும்போதெல்லாம் நாடாளுமன்றத்தில் அதானியின் ஸ்லீப்பர் செல்கள் செயல்படத் தொடங்கும் என்று மக்களவையில் காங்கிரஸ் துணைத் தலைவர் கவுரவ் கோகோய் கூறினார். அவர் கூறும்போது,’நாங்கள் சபாநாயகருடன் பேசினோம். நிஷிகாந்த் துபே தனது வார்த்தைகளை திரும்பப் பெற வேண்டும். மேலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை’ என்றார்.
* ரயில்களில் மூத்த குடிமக்கள் பத்திரிகையாளரின் சலுகை நிறுத்தம்: மக்களவையில் துரை வைகோ கேள்வி
புதுடெல்லி: மூத்த குடிமக்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ரயில் கட்டண சலுகை, கொரோனா தொற்று காலத்தில் நிறுத்தப்பட்டது. அந்த சலுகையை மீண்டும் கொண்டுவர ஒன்றிய அரசு எடுத்துள்ள நிலைப்பாடு குறித்து மக்களவையில் ரயில்வே அமைச்சரிடம் மதிமுக எம்.பி துரை வைகோ கேள்வி எழுப்பினார். இதற்கு ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளிக்கையில், ‘‘ஒரு பயண சேவை வழங்குவதற்கான கட்டணம் 100 ரூபாயாக இருந்தால், பயணச்சீட்டுக்கு ரூ.54 மட்டுமே பயணிகளிடம் வசூலிக்கப்படுகிறது. இதில் உறுப்பினர் குறிப்பிடும் அனைத்து பிரிவினர்களும் அடங்கும்’’ என்றார். ‘நிறுத்திவைக்கப்பட்ட கட்டண சலுகை இனி ஒருபோதும் மீண்டும் வழங்கப்படாது என்பதையே அமைச்சரின் பதிலால் உணர முடிகிறது’ என்று துரை வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
The post நாடாளுமன்ற துளிகள்… appeared first on Dinakaran.