திருமலை: கடையில் பதுக்கி வைத்து விற்ற ரூ.64 லட்சம் மதிப்புள்ள அரிய வகை ஆமைகளை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மேடிப்பள்ளி பீர்ஜாதிகுடா பகுதியைச் சேர்ந்தவர் ஷேக்ஜானி (50). இவர் ஆதர்ஷ்நகரில் ஃபேமஸ் அக்வாரியம் என்ற பெயரில் மீன் மற்றும் பறவைகளை விற்பனை செய்து வருகிறார். இவரது கடையில் விதிமுறைகளை மீறி நட்சத்திர ஆமைகள் விற்பனை செய்யப்படுவதாக மல்காஜிகிரி தனிப்படை மற்றும் உப்பல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் அவரது கடையில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது அவரது கடையில் அரிய வகையிலான நட்சத்திர ஆமைகளுடன், சிவப்பு காது ஸ்லைடர் ஆமைகளும் காணப்பட்டன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் நடத்திய விசாரணையில் இந்த ஆமைகள், பழைய மலக்பேட்டையில் உள்ள நியூஷைன் அக்வாரியம் நடத்தி வரும் சிராஜ்அகமது என்பவரிடம் இருந்து வாங்கியதாக ஷேக்ஜானி தெரிவித்தார்.இதையடுத்து, மலக்பேட்டையில் உள்ள நியூஷைன் அக்வாரியத்திலும் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆமைகளையும் பறிமுதல் செய்தனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விஜய்குமார் என்பவர் ஆமைகளை கொண்டு வந்து இங்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதனையடுத்து இருவரிடம் இருந்து ₹64 லட்சம் மதிப்புள்ள 281 நட்சத்திர ஆமைகள், 160 சிவப்பு காதுகள் ஸ்லைடர் ஆமைகள் மற்றும் 4 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து ஷேக்ஜானி, சிராஜ்அகமது ஆகிய இருவரையும் கைது செய்தனர். சட்டவிரோதமாக ஆமைகளை விற்பனையில் முக்கிய பங்கு வகிக்கும் விஜய்குமார் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
The post கடையில் பதுக்கிய ரூ.64 லட்சம் மதிப்புள்ள அரிய வகை ஆமைகள் பறிமுதல்: இருவர் கைது appeared first on Dinakaran.