நேரடியாக கிரகங்களுக்கு பரிகாரம் செய்யலாமா?

கிரக பரிகாரங்கள் எல்லாம் ஆன்மிகத்தின் அடிப்படையில்தான் சொல்லப்படுகின்றன. சில ஜோதிடர்கள், ஆன்மிகம் வேறு ஜோதிடம் வேறு. ஜோதிடம் ஒரு கணித சாஸ்திரம்.

அதற்கும் ஆன்மிகத்திற்கும் சம்பந்தமில்லை என்று சொல்லுகின்றார்கள். சனிதோஷம் இருந்தால் திருநள்ளாறு சென்று சனிக்குப் பூஜை செய்ய வேண்டும் என்று பரிகாரம் சொல்லும் போதே ஆன்மிகம் வந்து சேர்ந்துவிடுகிறது. ஆனால், சிலர் இதைச் சொல்லும் பொழுது குழப்ப நிலைக்கு ஆளாகின்றனர். அங்கே (திருநள்ளாறு) பிரதான தெய்வத்துக்குத் தான் முதலிடம். நேரடியாக நவகிரகங்களுக்கு பரிகாரங்கள் செய்வதால், தோஷம் குறைவது கிடையாது. இன்னும் சொல்லப்போனால், அதை நவகிரகங்களும் அனுமதிப்பது கிடையாது.

உதாரணமாக; திருநள்ளாறு விஷயத்தையே எடுத்துக் கொள்வோம், அந்த தல புராணக் கதையைத் தெரிந்து கொண்டால், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நிச்சயத்து விடலாம். நிடத நாட்டுமன்னனான நளன், விதர்ப்ப நாட்டு வீரசேனன் மகள் தமயந்தியைச் சுயம்வரத்தின் மூலமாக மணந்து கொண்டான். தேவர்களைப் புறக்கணித்து நளனைத் தமயந்தி மணந்தது கேட்டு, சனிபகவான் நளன்மேல் கோபம் கொண்டார். 12 ஆண்டுகள் காத்திருந்து, காலில் நீர்பட்டும் படாமலும் கழுவிச் சென்ற குற்றங்கண்டு அவனைப் பற்றினார்.

இதனால் நளன் பட்ட துன்பங்களை நாடறியும். திருமுதுகுன்றத்தில் (விருத்தாசலத்தில்) பரத்வாஜ முனிவர், அவனை திருநள்ளாறு சென்று வழிபடுமாறு அறிவுரை கூறினார். அவ்வாறே நளன், திருநள்ளாறடைந்து, தீர்த்தம் உண்டாக்கி, நீராடி, இறைவனை வழிபட, திருநள்ளாற்று ஆலயத்துள் நுழைந்தான். அவனைப் பற்றியிருந்த ‘சனி’ உள்ளே நுழைய அஞ்சி அங்கேயே தங்கிவிட்டார். இதனால் இத்தலத்தில் சனிபகவான் சந்நதி மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகின்றது. இந்த தல புராணக் கதையிலிருந்து என்ன தெரிந்து கொள்கிறோம்? இறைவனை நேரடியாகச் சரணடைந்துவிட்டால், கிரக தோஷங்கள் நம்மை நெருங்குவதில்லை. இப்பொழுது ஒரு கேள்வி கேட்கலாம்? நாம் வீட்டில் நவகிரக சாந்தி ஹோமங்கள் செய்கின்றோமே இதற்கெல்லாம் பலன் கிடையாதா? என்றால் யாரும் நவகிரக ஹோமங்களை ஒரு பிரதான ஹோம மாகச் செய்ய மாட்டார்கள்.

வெவ்வேறு ஹோமங்களின் ஒரு பகுதியாக நவகிரக சாந்தி ஹோமங்களை செய்கின்ற வழக்கம்தான் உண்டு. பிரதான தேவதையின் பூஜையில், நவகிரக கோமங்கள் அமைவதால், அந்த பிரதான தெய்வத்தின் அருள் கிடைக்கும். அந்த அருள் கிடைக்கும் பொழுது, நவகிரக தோஷம் தானாகவே நீங்கிவிடும் என்பதுதான், இதில் இருக்கக்கூடிய மிக முக்கியமான விஷயம். இதை நாம் சங்கல்ப மந்திரத்திலேயே தெரிந்து கொள்ளலாம்.

‘‘அஸ்மாகம் ஸஹ குடும்பானாம், லக்நா பேக்ஷய ஆதித்யாதி நவநாம் கிருஹானாம் அனுகூல்ய சித்யர்த்தம், சகல கிரக தோஷ நிவாரணர்த்தம்,’’ என்று நீண்டு வரும். தினம்தோறும் சொல்லும் சங்கல்ப மந்திரத்தாலே, இந்த தோஷங்கள் நிவர்த்தி ஆகிவிடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இப்பொழுது சில ஜோதிடர்கள் வெகு வினோதமாக பரிகாரங்களைச் சொல்ல ஆரம்பிக்கின்றார்கள்.

இந்தக் கோயிலுக்குச் சென்றால், இந்த ராசிக்காரர்களுக்கு துன்பம்தான் வரும், நன்மை கிடைக்காது என்றெல்லாம் இஷ்டத்துக்குச் சொல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள். எதை அடிப்படியாக வைத்து சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு கோயிலுக்குச் சென்று வருகின்ற பொழுது, யாருக்கோ எப்பொழுதோ நடந்ததை வைத்து, அந்தக் கோயிலுக்கு சென்றதால்தான் நடந்தது என்று சொல்வது எத்தனை அபத்தம்? அதுவும் திருப்பதி கோயிலுக்குச் சென்று வருவது இந்த ராசிக்காரர்களுக்கு பொருந்தாது. இவர்கள் வேறு கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்றெல்லாம் வினோதமாகச் சொல்லுகின்றார்கள். திருப்பதி கோயிலுக்குச் சென்றால் குறிப்பிட்ட தோஷம் மட்டுமல்ல எல்லா கிரக தோஷங்களும் நிவர்த்தி ஆகிவிடும் என்பது மக்களின் நம்பிக்கை.

அதனால்தான் ஒரு நாளைக்கு 50,000 முதல் 75 ஆயிரம் பேர் வரை பெருமாளை தரிசனம் செய்கின்றார்கள். தோஷங்கள் நிவர்த்தி ஆகவில்லை என்று சொன்னால், இத்தனை ஆயிரம் பேர் (எல்லா ராசிக்காரர்களும்) செல்வார்களா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதற்கு ஆதாரமாக நாம் தினந்தோறும் கேட்கக்கூடிய சுப்ரபாத பாடல் ஒன்று இருக்கிறது.

“சூர்யேந்து பெளம புத வாக்பதி காவ்ய செளரி
ச்வர்பானு கேது திவிஷத் பரிஷத் ப்ரதானா
த்வத் தாச தாச சரமாவதி தாச தாசா
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்’’
– இது வெங்கடேச சுப்ரபாதத்தில் உள்ள ஒரு பாட்டு.

இதன் அர்த்தம் என்ன தெரியுமா? சூரியன், இந்து என்கின்ற சந்திரன், பௌம எனப்படும் செவ்வாய், புதன், பேச்சுக்கு அதிபதியான பிரகஸ்பதி, அதாவது (வாக்பதி) வியாழன், காவியா என்று சொல்லப்படுகின்ற சுக்கிரன், சவுரி என்று சொல்லப்படுகின்ற சனி, இவர்களோடு சொர்ணபானு என்று சொல்லப்படுகின்ற ராகு கேது இவர்கள் எல்லாம், உன்னுடைய பக்தர்களுக்கு சேவை செய்வதற்காக இருப்பவர்கள். அதற்காகவே உன்னுடைய வாசலில் காத்திருப்பவர்கள். தேவர்களோடு இணைந்து தினசரி விடியல் காலை நேரத்திலே இந்த நவகிரகங்களும் உன்னுடைய வாசலில் உன்னுடைய அடியார்களுக்கு சேவை செய்வதற்காக காத்திருப்பதோடு உனக்கு சுப்ரபாதம் பாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று இந்தப் பாடலுக்குப் பொருள். அதனால்தான் திருப்பதிக்குச் சென்றால், சகல கிரக தோஷங்களும் நிவர்த்தி ஆகிவிடும் என்று வேதம் அறிந்த பெரியோர்களும், ஜோதிட சாஸ்திர அனுபவப் பெரியோர்களும் சொல்லி இருக்கின்றார்கள்.

எம்பெருமானின் திருவுள்ளக் கருத்திற்கு ஏற்பத்தான் கிரகங்களால் நடந்து கொள்ள முடியுமே தவிர, தானாகவே ஒரு வினையை அதிகப்படுத்தவோ குறைக்கவோ முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு உலகியல் உதாரணம் சொன்னால் புரியும்.

நம் மீது ஒரு வழக்கு பதிவு ஆகிறது. போலீஸ்காரர் நம்மை விசாரிக்கத் தேடிக்கொண்டு வருகின்றார். அந்த போலீஸ்காரருக்கு நாம் உபசாரம் செய்வதால், நம் மீது சற்று பரிவோடு நடந்து கொள்வாரே தவிர, குற்றச்சாட்டிலிருந்து அவர் சௌகரியத்துக்குவிட மாட்டார். இதில் அவர் விருப்பம் எதுவும் கிடையாது. நம்மை கைது செய்யாமல் இருப்பதற்கான அதிகாரம் கிடையாது. நம் மீது உள்ள குற்றச்சாட்டை நாம் கோர்ட்டில் மறுக்கலாம். கோர்ட்டில் தண்டனை பெற்றால், அதைக் குறைக்க நீதிபதியிடம்தான் முறையிட வேண்டும். கோர்ட் உத்தரவை அமுல்படுத்தும், அதிகாரிக்கு தண்டனையை நிறுத்தி வைக்கவோ, குறைக்கவோ அதிகாரம் கிடையாது அல்லவா. இங்கே ஒவ்வொருவரின் கர்மாவும் அதன் விளைவுகளும் அப்படித்தான் இயங்குகிறது.

1. தண்டனை என்பது வினைகளின் விளைவு. (பிராரப்த கர்மா)
2. தண்டனை வழங்குவது கோர்ட். (இறைவனின் மன்றம்).
3. அதை அமுல்படுத்தும் சிறை அல்லது காவல் அதிகாரிகள்தான் கிரகங்கள்.

எனவே கிரகங்களிடம் எத்தனை கெஞ்சினாலும், “நீதிமன்றத்தில் (இறைவனிடத்தில்) பேசிக்கொள்” என்றுதான் சொல்வார். ஒருக்கால் வினையிலிருந்து நம்மை விடுவித்து விட்டால் நவகிரகங்கள் என்ன பாடுபடும் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும். அதற்கும் ஒரு கதை இருக்கிறது.

The post நேரடியாக கிரகங்களுக்கு பரிகாரம் செய்யலாமா? appeared first on Dinakaran.

Related Stories: