சென்னையில் தரையிறங்க முடியாமல் மலேசியா, துபாய் விமானங்கள் பெங்களூருக்கு திரும்பி சென்றன

சென்னை: மலேசியா மற்றும் துபாயில் இருந்து சென்னைக்கு வந்த 2 சர்வதேச விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திரும்பி சென்றன. நிர்வாக காரணங்களால் விமானங்கள் பெங்களூரு திரும்பிச் சென்றதாக அறிவிக்கப்பட்டது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம் நேற்று காலை 7.25 மணிக்கு 152 பயணிகளுடன் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு தரையிறங்க வந்தது. ஆனால் அந்த விமானம் சென்னையில் தரையிறங்க அனுமதிக்காமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. அதுபோல், துபாயிலிருந்து 264 பயணிகளுடன் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை 8.15 மணிக்கு சென்னையில் தரையிறங்க வந்தது.

அந்த விமானத்தையும் சென்னையில் தரையிறங்க அனுமதிக்காமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பினர். அதேபோல் சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு காலை 8.05 மணிக்கு புறப்பட வேண்டிய ஏர் ஏசியா விமானம், 16 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 12:15 மணிக்கு புறப்படுவதால், இந்த விமானத்தில் பயணிக்க இருந்த பயணிகளுக்கு, தாமதம் குறித்து தகவல் தெரிவித்து, நேற்று மாலைக்கு மேல், சென்னை விமான நிலையத்திற்கு வரும்படி கூறினர்.
சென்னை விமான நிலையத்தில், கடந்த வாரம் முழுவதும் பெஞ்சல் புயல் கனமழை காரணமாக, விமான சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு, பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். இப்போது புயல் மழை ஓய்ந்து வானிலை சீரடைந்த பின்பும், இதேபோல் விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டு, சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாவது, தொடர்ந்து வருவது, பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post சென்னையில் தரையிறங்க முடியாமல் மலேசியா, துபாய் விமானங்கள் பெங்களூருக்கு திரும்பி சென்றன appeared first on Dinakaran.

Related Stories: