7 பேரின் சடலங்களை மீட்டது எப்படி?.. தப்பி ஓடியும் 2 பேர் உயிரிழந்த சோகம்: உதவி கமாண்டர் உருக்கமான தகவல்

திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணியை தலைமையேற்று நடத்திய, தேசிய பேரிடர் மீட்புப் படை உதவி கமாண்டர் தர் தெரிவித்ததாவது: திருவண்ணாமலையில் 7 பேர் மண் சரிவில் சிக்கி இருப்பதாக கடந்த 1ம்தேதி இரவு 8 மணிக்கு எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு விரைந்து வந்தோம். நள்ளிரவில் எங்களுடைய துப்பறியும் நாய்களின் உதவியுடன் அந்த இடத்தை ஆய்வு செய்தோம். அதில், மண் சரிவுக்குள் உடல்கள் புதைந்திருப்பதை உறுதிப்படுத்தினோம். அதைத்தொடர்ந்து, 2ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு எங்களுடைய மீட்பு நடவடிக்கையை தொடங்கினோம்.

எங்களுடன், தமிழ்நாடு கமாண்டோ படை வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் இணைந்து மீட்புப்பணியில் பங்கேற்றனர். மழையினால் மண் சகதியாக இருந்தது. சகதியின் அடியில் இருந்த பாறைக்கற்களை அகற்றுவது பெரும் சவாலாக இருந்தது. மனித உழைப்பின் மூலம் இவற்றை அகற்றி உடல்களை மீட்க 10 நாட்கள் ஆகலாம் என்ற நிலை இருந்தது. எனவே, அருகில் இருந்த அங்கன்வாடி கட்டிடம் மற்றும் ஒரு பழைய வீட்டை இடித்து வழி ஏற்படுத்தி ஜேசிபி இயந்திரத்தை கொண்டு வந்து மீட்பு பணியை விரைவு படுத்தினோம். அதன் மூலம், சகதிகள் அகற்றப்பட்டு பாறைகளை நகர்த்தி மண் சரிவில் முழுவதுமாக புதைந்திருந்த வீட்டின் மையப் பகுதியில் (ஹால்) முதலில் ஒரு சிறுவனின் உடலை மீட்டோம். அடுத்தடுத்து அதே பகுதியில் நான்கு உடல்களை மீட்டோம். அதைத்தொடர்ந்து, வீட்டு வாசல் பகுதியில் ஒரு சடலத்தை மீட்டோம்.

மேலும், இரண்டு சடலங்களை கண்டெடுக்க தொடர்ந்து முயற்சிகள் நடந்தன. ஆனால், வீட்டுக்குள் சடலங்கள் இல்லை. எனவே, மண் சரிவு ஏற்படுவதை அறிந்து வீட்டை விட்டு தப்பித்து வெளியேற முயற்சித்து இருக்கலாம் என்ற அனுமானத்தின் அடிப்படையில், கதவுக்கு அருகே எங்கள் தேடுதல் பணி தொடர்ந்தது. அப்போது, வாசலை ஒட்டி ராஜ்குமாரின் சடலம் மீட்கப்பட்டது. வீட்டுக்கு அருகில் மின்கம்பம் பகுதியில் இறுதியாக ஒரு சிறுமியின் சடலத்தை மீட்டோம். மண் சரிவு ஏற்படுவதை கடைசி நேரத்தில் உணர்ந்து வீட்டை விட்டு ஓடி வெளியேற முயற்சித்துள்ளனர். ஆனாலும், கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த விபரீதம் நடந்து விட்டதால் அவர்களால் வெளியேறி தப்பிக்க முடியவில்லை. இவ்வாறு தெரிவித்தார்.

The post 7 பேரின் சடலங்களை மீட்டது எப்படி?.. தப்பி ஓடியும் 2 பேர் உயிரிழந்த சோகம்: உதவி கமாண்டர் உருக்கமான தகவல் appeared first on Dinakaran.

Related Stories: