தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 27.11.2024 அன்று தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 7 மாத கால அடிப்படை பயிற்சியும் மற்றும் ஒரு மாத கால நடைமுறை பயிற்சியும் அளிக்கப்படும். இப்பயிற்சியானது திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், திருச்சி, சேலம், கோவை, மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய 8 நிரந்தர காவலர் பயிற்சி பள்ளிகளில் அளிக்கப்படும்.
மொத்தம் தேர்வு செய்யப்பட்ட 2665 காவலர்களில் 792 பெண் ஆயுதப்படை காவலர்களுக்கு திருவள்ளூர் (300), வேலூர் (200) மற்றும் விழுப்புரம் (292) மற்றும் 1861 ஆண் தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்களுக்கு மற்றும் பின்தங்கிய ஆயுதப்படை ஆண் காவலர்கள் 12 சேர்த்து மதுரையில் (389 பேர்), தூத்துக்குடி (512), சேலம் (422), திருச்சி (350) மற்றும் கோவை (200) பயிற்சி அளிக்கப்படும்.
அடிப்படை பயிற்சியின் போது, பயிற்சி காவலர்களுக்கு வெளிப்புற மற்றும் உட்புற நடவடிக்கைகள் சம்மந்தமான பயிற்சி அளிக்கப்படும். வெளிப்புற செயல்பாடுகளில் உடல் பயிற்சி, கவாத்து அணிவகுப்பு, துப்பாக்கி சூடு, கமாண்டோ பயிற்சி, ஜங்கிள் பயிற்சி போன்றவை அடங்கும் மேலும் உட்புற செயல்பாடுகளில் சட்டம், கைரேகை, முதலுதவி, அறிவியல் சார்ந்த புலனாய்வு, உளவியல், வாழ்க்கை நெறிமுறைகள் மற்றும் வாழ்க்கை சமநிலை போன்றவையும் அளிக்கப்படும்.
மேற்கண்ட தேர்வு செய்யப்பட்ட பயிற்சி காவலர்களுக்கு 04.12.2024 முதல் துவங்க உள்ள பயிற்சிக்கு, காவல் பயிற்சி பள்ளிகளில் அனைத்து தேவையான அம்சங்களும் முன்கூட்டியே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், சந்தீப் ராய் ரத்தோர், காவல்துறை இயக்குநர், பயிற்சி, அவர்களின் உத்தரவின்பேரில் 8 காவல் பயிற்சி பள்ளிகளிலுள்ள உட்புற மற்றும் வெளிப்புற பயிற்றுனர்களுக்கு முதல்முறையாக “பயிற்றுனர்களுக்கான பயிற்சியை“ மதுரை காவல் பயிற்சி பள்ளியில் 25.11.2024 முதல் 30.11.2024 வரை நடத்தப்பட்டது. பயிற்சி காவலர்களுக்கு பயிற்சியை திறம்பட நடத்துவதற்கும் அவர்களின் திறனை மேம்படுத்துவதற்கும் இப்பயிற்சி நடத்தப்பட்டது. இப்பயிற்சியில் சுமார் 158 உட்புற மற்றும் வெளிப்புற காவல் ஆளிநர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்கள்.
சந்தீப் ராய் ரத்தோர், காவல் துறை இயக்குநர், பயிற்சி, அவர்கள் 03.12.2024 அன்று சேலம் காவல் பயிற்சி பள்ளிக்கு சென்று அங்கே மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஏற்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார். பயிற்சி காவலர்களுக்கான அடிப்படை பயிற்சியை திறம்படவும், வெற்றிகரமாகவும் நடத்துவதற்கான அனைத்து ஆயத்த ஏற்பாடுகளும் 8 காவல் பயிற்சி பள்ளிகளிலும் செய்யப்பட்டு பயிற்சியை துவக்க தயார் நிலையில் உள்ளன.
The post சேலம் காவலர் பயிற்சி பள்ளியில் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆய்வு appeared first on Dinakaran.