திருவள்ளூர்: அதிக கடன் சுமை காரணத்தால் தங்கைக்கு தகவல் தெரிவித்துவிட்டு வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அடுத்த மணவாளநகரைச் சேர்ந்தவர் செல்வபதி (48). இவரது மகன் மணி (28). இவர் டிப்ளமோ மெக்கானிக்கல் படித்துவிட்டு தற்போது போன் பே என்ற நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்த அவர் பின்னர் பகல் 12 மணிக்கு வெளியே சென்றுள்ளார்.
மாலை 5.30 மணியளவில் அவர் தன் தங்கை திவ்யாவுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தனக்கு அதிகப்படியான கடன் சுமை இருப்பதால் தான் கம்மவார் பாளையம் கங்கை அம்மன் கோயில் அருகில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்யப் போவதாகவும், தன்னுடைய இறப்பிற்கு யாரும் காரணம் அல்ல என்றும் மெசேஜ் குறிப்பிட்டிருந்தார். இதேபோல் காவல்துறைக்கும், தீயணைப்பு துறையினருக்கும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேள்விப்பட்ட செல்வபதி உடனே சம்பவ இடத்திற்கு சென்றபோது மகன் மணி கிணற்றில் சடலமாக கிடந்ததை பார்த்து கதறி அழுதார். இதனை தொடர்ந்து, தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் அவரது சடலத்தை மணவாள நகர் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடன் சுமையால் இளைஞர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்த இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post தங்கைக்கு வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவித்துவிட்டு கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை: கடன் சுமையால் விபரீத முடிவு appeared first on Dinakaran.