பொன்னேரி: பொன்னேரி அருகே, மின்சாரம் பாய்ந்து கறவை மாடுடன் பால் வியாபாரியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த மூலதாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (58). இவர், தனக்கு சொந்தமான 4 பசுக்களை வைத்து பால் வியாபாரம் செய்து வந்தார். நேற்று வழக்கம்போல் மாடுகளை மேய்க்க சென்றபோது, 3 பசு மாடுகள் வேறு ஒருவர் நிலத்தில் மேய்ந்ததால் அங்கு கட்டி வைக்கப்பட்டுள்ளது.
இதனை அறியாமல் ஏழுமலை ஒரு பசுவுடன் காணாமல் போன 3 மாடுகளை தேடி அலைந்துள்ளார். இந்நிலையில், இலவம்பேடு ஏரியின் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் எதிர்பாராத விதமாக பசுவுடன் சேர்ந்து ஏழுமலையும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி போலீசார் ஏழுமலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே பழுதடைந்த மின் கம்பங்களையும், மின் கம்பிகளையும் சீரமைக்குமாறு பலமுறை மின்வாரிய ஊழியர்களிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
The post அறுந்து கிடந்த மின் வயரை மிதித்ததால் கறவை மாடுடன் பால் வியாபாரி பலி appeared first on Dinakaran.