திருத்தணி: அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் பராமரிப்பின்றி, செடிகொடிகள் ஆக்கிரமித்திருக்கும் நடைமேடையை சீரமைத்து தர நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் இருந்து அரக்கோணம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில், பாதசாரிகள் நடந்து செல்ல ஏதுவாக சாலையை விரிவுப்படுத்தி நடைமேடை மற்றும் கைப்பிடி அமைக்கப்பட்டது.
அவ்வழியாக மாநில நெடுஞ்சாலை பகுதியைச் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வர வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சாலை அமைக்கப்பட்டு ஒரு சில மாதங்கள் கடந்த நிலையில், அரக்கோணம் நெடுஞ்சாலைத் துறையினர் முறையாக சாலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாமல் மெத்தனம் காட்டி வருகின்றனர். இதனால், கார்த்திகேயபுரம், வள்ளியம்மாபுரம், டி.புதூர் உள்ளிட்ட பகுதியில் நெடுஞ்சாலையோரம் நடைமேடை முழுவதும், செடிகொடிகள் படர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது.
இதனால், அவ்வழியாக பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வாகன நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை நிலவி வருகிறது. எனவே, அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் பாதசாரிகள், வாகன ஓட்டிகளுக்கு இடையைூறு அளிக்கும் வகையில் புதர் மண்டியுள்ள நடைமேடையை சீரமைத்து தர நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post அரக்கோணம் நெடுஞ்சாலையில் நடைமேடையை ஆக்கிரமித்து முளைத்துள்ள செடிகொடிகள்: சீரமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.