ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், பலத்த காயமடைந்து 10 மாத ஆண் குழந்தை பரிதாபமாக பலியானது. இதில் குழந்தையின் தந்தை உட்பட் 2 பேர் படுகாயமடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை தாலுகா, ஆர்.பி.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (34). ஆர்.கே.பேட்டையில் உள்ள பேட்டரி கடையில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கு, முத்துஷாலினி (30) என்ற மனைவியும், லத்தியா (2) என்ற மகளும், வேலன் என்ற 10 மாத ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை ராஜா, தனது குடும்பத்துடன் பைக்கில் ஆர்.கே.பேட்டை பஜார் வீதிக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அம்மையார்குப்பம் அரசு மருத்துவமனை அருகே வந்தபோது, எதிரில் அதிவேகமாக வந்த மற்றொரு பைக், ராஜாவின் பைக் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் ராஜா, 10மாத ஆண் குழந்தை வேலன் மற்றும் மதுபோதையில் அதிவேகமாக பைக்கினை ஓட்டிவந்த வாலிபர் ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர். ராஜாவின் மனைவி, மகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனைகண்ட சக வாகன ஓட்டிகள் பலத்த காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு, அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, குழந்தை வேலனை மட்டும் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த ஆர்.கே.பேட்டை போலீசார், வழக்குப்பதிவு செய்து விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து 10 மாத குழந்தை பரிதாப பலி: தந்தை உட்பட 2 பேர் படுகாயம் appeared first on Dinakaran.