மனு வழங்கிய சில நிமிடங்களிலேயே மாற்றத்திறனாளி பயனாளிக்கு நவீன தையல் இயந்திரம்: கலெக்டர் வழங்கினார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூத்தரங்கில் நேற்று பொதுமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு, கடன் உதவி, பசுமை வீடு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 419 மனுக்களை அளித்தனர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து கலெக்டர் மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்பட்ட சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்டறிந்து அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

பின்னர் மாற்றுத்திறனாளி பயனாளி ஒருவர் வாழ்வாதாரத்திற்காக தையல் இயந்திரம் கேட்டு விண்ணப்ப மனு வழங்கினார். இந்நிலையில் மனு வழங்கிய சில நிமிடங்களிலேயே மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ப.ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் மாற்றத்திறனாளி பயனாளிக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பிலான நவீன தையல் இயந்திரத்தை கலெக்டர் வழங்கினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமார், பொன்னேரி சப் கலெக்டர் வாகே சங்கத் பல்வந்த், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ப.ரவிச்சந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், வருவாய் கோட்டாட்சியர்கள் திருவள்ளூர் ஏ.கற்பகம், திருத்தணி க.தீபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post மனு வழங்கிய சில நிமிடங்களிலேயே மாற்றத்திறனாளி பயனாளிக்கு நவீன தையல் இயந்திரம்: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: