×
Saravana Stores

1,500கிமீ தூரம் சென்று இலக்குகளை தாக்கும் இந்தியாவின் முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி: இது வரலாற்று தருணம்

புதுடெல்லி: நீண்ட தூரம் பறந்து சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கும் இந்தியாவின் முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இது வரலாற்று தருணம் என அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பொதுவாக வழக்கமான வெடிபொருள்கள், அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டவை. மேலும் கடல் மட்டத்தில் ஒரு மணி நேரத்துக்கு ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில்(அதாவது மாக் 5 சுமார் 1,200கிமீ தூரம்) பறக்கும் திறன் கொண்டவை. ஆனால் மேம்பட்ட திறன் கொண்ட சில ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் 15 மாக் வேகத்தில் கூட பறக்கும் திறன் பெற்றவை. தற்போது சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் தயாரிப்பில் முன்னணியில் உள்ளன. அமெரிக்கா ஒரு லட்சிய திட்டத்தின்கீழ் இதுபோன்ற ஆயுதங்களின் வரம்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் இந்தியாவின் முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணை நேற்று ஒடிசாவில் உள்ள ஏபிஜே அப்துல்கலாம் தீவின் சந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

இந்த ஏவுகணை ஐதராபாத்தின் டாக்டர்.ஏபிஜே அப்துல்கலாம் ஏவுகணை தளத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு(டிஆர்டிஓ) மற்றும் ஆய்வகங்கள் மற்றும் தொழில்துறை கூட்டாளர்களுடன் இணைந்து உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வகையான ஆயுதங்களை சுமந்து கொண்டு 1,500கிமீ தூரத்துக்கும் அதிகமாக பறந்து சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தன் எக்ஸ் தளத்தில், “இந்தியா நீண்டதூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி புதிய மைல்கல்லை எட்டி உள்ளது. இரு ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தருணம். இந்த குறிப்பிடத்தக்க சாதனை முக்கியமான மற்றும் மேம்பட்ட ராணுவ தொழில்நுட்ப திறன்களை கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின் குழுவில் இந்தியாவை சேர்த்துள்ளது” என பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, ஆயுதப்படைகள் மற்றும் தொழில்துறையினருக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு, வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

The post 1,500கிமீ தூரம் சென்று இலக்குகளை தாக்கும் இந்தியாவின் முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி: இது வரலாற்று தருணம் appeared first on Dinakaran.

Tags : India ,New Delhi ,Minister ,Rajnath Singh ,Dinakaran ,
× RELATED வரி ஏய்ப்பு புகார்: ட்ரூகாலர் அலுவலகங்களில் வருமான வரி சோதனை