திருவாரூர் மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை

திருவாரூர், நவ.15: திருவாரூர் மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு நடத்தி ஆலோசனை வழங்கினார். திருவாரூர் மாவட்டத்தில் அரசின் வளர்ச்சிதிட்ட பணிகள் குறித்து சட்டபேரவை மதிப்பீட்டு குழுத்தலைவர் காந்திராஜன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அனைத்துத்துறை வளர்ச்சித்திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுத்தலைவர் காந்திராஜன் தலைமை வகித்தார். கலெக்டர் சாரு, குழு உறுப்பினர்கள் கருமாணிக்கம் (திருவாடாணை), சேவூர் இராமசந்திரன் (ஆரணி), பன்னீர்செல்வம் (சீர்காழி), ஓ.எஸ்.மணியன் (வேதாரண்யம்) மற்றும் எல்.எல்.ஏ மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி), தமிழ்நாடு சட்டமன்ற பேரவை முதன்மை செயலாளர் முனைவர் சீனிவாசன், மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலு முன்னிலை வகித்தனர்.

இதில் குழுத்தலைவர் காந்திராஜன் பேசியதாவது:
தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க, திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை குழுவானது, நேரில் ஆய்வு மேற்கொண்டு, பார்வையிட்டோம். வளர்ச்சித்திட்டப் பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. ஒரு மாவட்டத்தின் வளர்ச்சித்திட்டப் பணிகள் சிறப்பாக செயல்படுகிறதா என்பதை சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு அவ்வப்போது ஆய்வுசெய்து வருகிறது.

குறிப்பாக மக்கள் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு சரியாக கிடைக்கப்பெற அரசு அலுவலர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும். தமிழக முதல்வர் ஆட்சிப்பொறுப்பேற்றப்பின், பல சிறப்புமிக்க திட்டங்களை வகுத்து அதை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டம், மகளிர் சுய உதவிக்குழு சுழல்நிதி திட்டம், மாணவர்களுக்கான நான் முதல்வன் திட்டம், கலைஞரின் கனவு இல்லம் திட்டம் என பல திட்டங்கள் மூலம் மக்கள் பயனடைந்து வருகின்றனர். தொடர்ந்து, முதல்வர் தினந்தோறும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதுப்புது திட்டங்களை அறிவித்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வருகிறார். இவ்வாறு காந்திராஜன் தெரிவித்துள்ளார்.

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 6 பயனாளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரத்து 638 மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரமும், 4 பயனாளிகளுக்கு தலா ரூ.7 ஆயிரத்து 280 மதிப்பீட்டில் விலையில்லா சலவைபெட்டியினையும் குழுத்தலைவர் காந்திராஜன் வழங்கினார். முன்னதாக, திருவாரூர் அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோவிலில் ரூ.78 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் கல்தேர் மண்டபம் புனரமைப்புப்பணி நடைபெற்றுவருவதையும், நன்னிலம் வட்டம், நீலக்குடியில் ரூ.6 கோடி 36 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் கங்களாஞ்சேரி வடகண்டம் சாலை மற்றும் கங்களாஞ்சேரி மணக்கால் சாலை இணைக்கும் வகையில் வெட்டாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு வருவதையும், கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட திருக்கண்ணமங்கை ஊராட்சியில் துணை வேளாண் விரிவாக்க மையத்தில் விதை சேமிப்பு கிடங்கு, உழவர் உற்பத்தியாளர்கள், நிறுவனங்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை ஆய்வு செய்து, 3 பயனாளிகளுக்கு உழவு இயந்திரங்களை குழுத்தலைவர் காந்திராஜன் வழங்கினார்.

திருத்துறைப்பூண்டி நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.7 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலைய மேம்பாட்டு பணிகள் நடைபெற்றுவருவதை ஆய்வு செய்து பணிகளை ஒப்பந்தக்கால கெடுவிற்குள் நிறைவு செய்யுமாறு நகராட்சி பொறியாளருக்கு அறிவுறுத்தியதுடன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளி மாணவியர் விடுதியினை ஆய்வு செய்து மாணவியர் தங்கி இருக்கும் இடங்கள் மற்றும் சமையல் கூடங்களையும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுத்தலைவர் காந்திராஜன் தலைமையிலான குழு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூடுதல் செயலாளர் சுப்பிரமணியன், துணைச்செயலாளர் பாலகிருஷ்ணன், டி.ஆர்.ஒ சண்முகநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் செந்தில்வடிவு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post திருவாரூர் மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை appeared first on Dinakaran.

Related Stories: