கோவை, நவ. 15: போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையை துரிதப்படுத்தி 176 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 350 கிலோ புகையிலை பொருட்கள் கடந்த 15 நாட்களில் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திருடப்பட்ட மற்றும் தொலைந்து போன ரூ.48.36 லட்சம் மதிப்பிலான 252 செல்போன்கள் மீட்கப்பட்டது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் நேற்று உரியவர்களிடம் வழங்கினார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: செல்போன்கள் திருட்டு தொடர்பாக பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 750 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
மாவட்டத்தில் உள்ள 65 தாபாக்களில் 41 தாபாக்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் 11 தாபாக்களில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து 250 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அந்த 15 தாபாக்களையும் சீல் வைக்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குடும்ப உணவகம் என்ற பெயரில் தாபாக்களை நடத்தி வரும் சிலர் சட்டவிரோதமாக அங்கு மதுபானங்களை விற்பனை செய்து வருகின்றனர். இதனால், அங்கு உணவருந்த செல்பவர்கள் மது அருந்துவதாக தெரிய வந்தது.
இதன் பேரில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. செல்போன் திருட்டு சம்பவங்களை பொறுத்தவரை சில சம்பவங்கள் தன்னிச்சையாகவும், சில சம்பவங்கள் திட்டமிட்டு ஒரு கும்பல் அதனை நடத்தி வருவதும் தெரியவந்துள்ளது. அது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி தகவல்களை திரட்டி வருகிறோம். கருமத்தம்பட்டி, பேரூர், மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகளில் நடத்திய போதை பொருளுக்கு எதிரான சோதனைக்கு நல்ல ஒரு தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் போதைப்பொருள் புழக்கம் குறைந்து உள்ளது.
தொண்டாமுத்தூர் பகுதியில் 500 கிராம் எடையிலான போதை காளான்கள் மற்றும் உயர் ரக போதைப்பொருள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. போதைப்பொருள் தொடர்பாக பிடிபடும் நபர்களிடம் அவர்கள் எங்கிருந்து போதை பொருட்களை வாங்குகிறார்கள்? எங்கு கொடுக்கிறார்கள்? என்பன குறித்த முழு விவரங்களையும் சேகரித்து வருகிறோம். கடந்த 20 நாட்களாக போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையை துரிதப்படுத்தி 176 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 350 கிலோ புகையிலை பொருட்கள் கடந்த 15 நாட்களில் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், கூல் லிப் மட்டும் 150 கிலோ ஆகும்.
போதைப்பொருள் தடுப்பு குழுக்கள் எப்படி இயங்க வேண்டும்? என்பது குறித்த அரசாணை இருக்கிறது. அதன் அடிப்படையில் கோவையில் கல்லூரிகளில் மாணவர்களிடையே போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். காவல்துறை மட்டுமின்றி கல்வித்துறை, தனியார் நிறுவனங்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே போதை பொருட்கள் பழக்கத்தை முற்றிலுமாக தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
The post 350 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்; 176 கடைகளுக்கு சீல் appeared first on Dinakaran.