அவிநாசி, நவ.15: திருப்பூர் மாநகராட்சி கழிவு குப்பைகளை பொங்குபாளையம் ஊராட்சி கல்குவாரியில் கொட்ட எதிர்ப்பு தெரிவித்து பொங்குபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் ஒன்றியம் பொங்குபாளையம் ஊராட்சிக்குட்பட்ட காளம்பாளையம் அருகே உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடமான பள்ளிபாளையம் பகுதியில் காலாவதியான கல்குவாரி உள்ளது. இதில் மாநகராட்சி குப்பைகளை கொட்டக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக குப்பைகளை கொட்ட வந்த மாநகராட்சி கனரக வாகனங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நடந்த பேச்சுவார்த்தையின் போது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து கல்குவாரியில் குப்பை கொட்டப்பட்டு வந்ததால் துர்நாற்றம் அதிகளவில் வீசுவதாக கூறி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் இயக்கங்கள் சார்பில், நேற்று பொங்குபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில்: இப்பகுதியில் குப்பைகழிவுகளை கொட்டுவதால் அதிக அளவில் துர்நாற்றம் வீசுகிறது.நோய் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. குப்பைகளால் நிலம்,நீர்,காற்று மாசாகி, நோய் தொற்று ஏற்படுத்தி விடும். கிராம மக்களுக்கு உடல் நல பாதிப்பை ஏற்படுத்த முயற்சித்து வருவதை எதிர்த்து ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மேலும் தொடர்ந்து கல்குவாரிக்குள் குப்பைகளை கொட்ட வேண்டாம் என்று கூறினர்.
முற்றுகை போராட்டம்,ஆர்ப்பாட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்த அவிநாசி போலீஸ் டி.எஸ்.பி. சிவகுமார் தலைமையில், பெருமாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
The post மாநகராட்சி குப்பைகளை கொட்ட எதிர்ப்பு; பொங்குபாளையம் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை appeared first on Dinakaran.