சூரியனார் கோயில் ஆதீன மடத்தை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது குறித்து இன்று முடிவு: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை அமைச்சர் சேகர்பாபு நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார். அதன்படி கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையப் பணிகள், ஸ்டான்லி மருத்துவமனை மேம்பாலம் அருகில் உள்ள பொதுப்பணித்துறை பழைய பணிமனையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய புதிய குடியிருப்பு திட்டப் பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது வீட்டு வசதி வாரியத்தின் செயலாளர் காகர்லா உஷா, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஷ்ரா, மீன்வளத்துறை ஆணையர் கெஜலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 218 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கொளத்தூரில் உள்ள வண்ண மீன்கள் விற்பனை உரிமையாளர் மற்றும் தொழிலாளர்களுக்கு ₹54 கோடி செலவில் 2 ஏக்கர் நிலப்பரப்பில் 138 கடைகளுக்கான கட்டுமான பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார். அந்த பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டோம்.

தொடர்ந்து யூனைட் காலனியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நூலகத்தை மேம்படுத்துவதற்காக ஆய்வு மேற்கொண்டோம். ஸ்டான்லி மருத்துவமனை அருகே நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 776 வீடுகள் கட்டப்பட உள்ளன. இதேபோல் வால்டாக்ஸ் சாலை, தண்ணிதொட்டி தெருவில் 700 குடியிருப்புகள் என மொத்தமாக 1,476 குடியிருப்பு பணிகள் இந்த மாதம் இறுதியில் தொடங்கப்படும். முதலமைச்சர் நேரடி கண்காணிப்பில் வடசென்னை தொகுதி உள்ளது. ஒரு சில சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை, பெருநகர சென்னை வளர்ச்சி குழுமம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைத்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்த ஆய்வுக்கூட்டம் வரும் 15ம் தேதி துணை முதலமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது. 74 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பிராட்வே பேருந்து நிலையத்தை மேம்படுத்த ₹822 கோடி மதிப்பில் பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டு 9 மாடி கட்டிடமும் மீதம் உள்ள இடங்கள் வணிக வளாகத்திற்கும் பயன்படுத்தப்பட உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோயில் ஆதீன மடம் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வருவது குறித்து இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 60 மற்றும் 60கியின்படி முழுமையான விசாரணை நடத்தி மடத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். மடத்தை எடுத்துக் கொள்வதற்கான கடிதத்தை அதிகாரிகள் பெற்றுள்ளனர். இதுகுறித்து கலந்தாசிக்கப்பட்டு இன்று முடிவெடுக்கப்படும். மடத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது எங்களுக்கு தெரியாது, அது குறித்தும் ஆய்வு செய்யப்படும். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது. இவ்வாறு அவர் பேசினார்.

The post சூரியனார் கோயில் ஆதீன மடத்தை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது குறித்து இன்று முடிவு: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: