களை கட்டிய சுற்றுலா தலங்கள் ஊட்டி, கொடைக்கானலுக்கு மக்கள் வருகை அதிகரிப்பு

ஊட்டி: தொடர் விடுமுறை எதிரொலியாக ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு மக்கள் வருகை அதிகரித்துள்ளது. பள்ளி அரையாண்டு தேர்வு, கிறிஸ்துமஸ் விடுமுறை என தற்போது தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா, சூட்டிங் மட்டம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றுலா பயணிகள் மொய்த்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வாகனங்களால் நகரின் முக்கிய சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

புறநகர் பகுதிகளில் சுற்றுலா தலங்களுக்கு சென்று விட்டு உணவு மற்றும் பல்வேறு தேவைகளுக்காக அதிகளவு சுற்றுலா பயணிகள் பகல் நேரங்களில் வரும்போது, கமர்சியல் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க பூங்கா செல்லும் வாகனங்களை டிபிஓ கலெக்டர் அலுவலகம் சாலை வழியாக தாவரவியல் பூங்காவிற்கு செல்லவும், தாவரவியல் பூங்காவில் இருந்து வெளியில் செல்லும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழித்தடத்திலும் திருப்பி விடப்பட்டன. எனினும், அவ்வப்போது ஊட்டி நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஊட்டி படகு இல்லத்தில் வெகு நேரம் காத்திருந்து பயணிகள் படகு சவாரி மேற்கொண்டனர். சுற்றுலா பயணிகள் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மலைகளின் இளவரசி எனஅழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மோயர் பாயிண்ட், குணா குகை, ைபன் பாரஸ்ட், கோக்கர்ஸ் வாக், பசுமை பள்ளத்தாக்கு, தூண் பாறை ஆகிய இடங்களில் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரி சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் ரைடிங் செய்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். பனி படர்ந்த சூழலில் காணப்படும் பிரையண்ட் பூங்காவில் பூத்து குலுங்கும் பல வண்ண மலர்களையும், கண்ணாடி மாளிகையில் உள்ள அரிய வகை தாவரங்கள், பூக்களையும் கண்டு ரசித்தனர்.

கொடைக்கானலின் நுழைவு பகுதியில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி முன்பு புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்கின்றனர். இங்கு தற்போது உறைபனி சீசன் காரணமாக பகலில் இதமான சூழலும், இரவில் கடும் குளிரும் நிலவி வருகிறது. இந்த மாறுபட்ட சீதோஷ்ண சூழலை சுற்றுலாப்பயணிகள் வெகுவாக அனுபவித்து வருகின்றனர். சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பால் அனைத்து தங்கும் விடுதிகளும் ஹவுஸ்புல்லாகி விட்டன. மேலும் சுற்றுலா வாகனங்கள் அதிகரிப்பால் நகர் மற்றும் சுற்றுலா இடங்களில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

The post களை கட்டிய சுற்றுலா தலங்கள் ஊட்டி, கொடைக்கானலுக்கு மக்கள் வருகை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: