அந்த வகையில், தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 11 திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானமும், 760 கோயில்களில் ஒருவேளை அன்னதானமும் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக 110 கோடி ரூபாய் செலவிடப்படுவதோடு, ஆண்டுதோறும் சுமார் 3 கோடியே 36 லட்சம் பக்தர்கள் பயன்பெற்று வருகின்றனர். கோயில்களில் தயாரிக்கப்படும் அன்னதானம் மற்றும் பிரசாதம் தரத்துடனும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுவதை உறுதி செய்திட இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தால் வழங்கப்படும் உணவு தர பாதுகாப்புச் சான்றிதழை 523 திருக்கோயில்கள் பெற்று, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்பது சிறப்புகுரியதாகும்.
இந்த நிலையில், நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக, மதுரை கள்ளழகர் கோயில் மற்றும் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில் ஆகிய இரண்டு திருக்கோயில்களில் இத்திட்டத்தினை தொடங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சார்பாக நடத்தப்படும் ஒரு பள்ளி மற்றும் 4 கல்லூரிகளில் ஏற்கனவே காலை உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில் மதிய உணவு வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்மூலம் 5,775 மாணவ, மாணவியர் பயன்பெறுவர்.
இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என். ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் சி.ஹரிப்ரியா, இணை ஆணையர்கள் லட்சுமணன், பொ. ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். காணொலிக் காட்சி வாயிலாக, மதுரையில் இருந்து அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.எஸ். சங்கீதா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்களும். மருதமலையிலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்களும், பழனியிலிருந்து சார்-ஆட்சியர் எஸ். கிஷன் குமார், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
The post கள்ளழகர் , மருதமலை முருகன் கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்: பழனி முருகன் கோயிலில் மதிய உணவு வழங்கும் திட்டம் தொடக்கம் appeared first on Dinakaran.