நாகர்கோவில்: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், குமரி மாவட்டம் திக்கணங்கோட்டில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நடிகர் விஜய் கட்சி தொடங்கியதால், நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி குறையவில்லை. என்னை தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள், என்னை நேசிக்கிறவர்கள், என்னை பின் தொடர்பவர்கள், எனக்கு வாக்களிப்பவர்கள் பொழுதுபோக்கு தளத்தில் தலைவர்களை தேடுபவர்கள் அல்ல. போராட்ட களத்தில் தலைவனை தேடுபவர்கள் தான் எனக்கு வாக்களிப்பார்கள். காற்றில் பறக்கும் பதர்கள் அல்ல நாங்கள்.
புயலே அடித்தாலும் நிமிர்ந்து நிற்கிற தூய நெல்மணிகளாக இருப்பவர்கள் தான் எனக்கு வாக்களிப்பார்கள். கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் கட்சி தொடங்கியவன் நான். அவர்களை விட விஜய் என்ன பெரிய தலைவரா? அவர்களுக்கு சேராத கூட்டமா இப்போது நடிகர் விஜய்க்கு சேர்ந்து இருக்கிறது. கார்த்திக் சிதம்பரம் எனக்கு ஓட்டு வங்கி குறைந்திருப்பதாக கூறுகிறார். எந்தவித கூட்டணியும் இல்லாமல் என்னுடன் ஒரே தொகுதியில் போட்டி போட கார்த்திக் சிதம்பரம் தயாராக இருக்கிறாரா? சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு வருடம் தான் இருக்கிறது. தேர்தல் முடிந்து வாக்கு எண்ணும் போது நாம் தமிழர் கட்சியின் வாக்கு எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பது தெரியும்.
தமிழ் தேசியமும், திராவிடமும் இரு கண்கள் என சிலர் அறியாமல் சொல்கிறார்கள். எல்லோரும் ஒன்று தான். மொழி, இனம் என பிரிக்க கூடாது என்கிறார்கள். பிறகு ஏன்? தமிழக வெற்றிக்கழகம் என பெயர் வைக்கிறீர்கள். உங்களுக்கு தான் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள் தானே? உலக வெற்றிக்கழகம் என்று பெயர் வைக்க வேண்டியது தானே? அடிப்படை தெரியாமல் பேசக்கூடாது.
இந்தியாவிலேயே 8 கோடி மக்களுடன் கூட்டணி வைத்துள்ளேன். 100 வேட்பாளர்களை முடிவு செய்து, வேலை செய்து கொண்டு இருக்கிறேன். தனித்து தான் போட்டியிடுவேன். யார் கூடவும் கூட்டணி இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
The post கலைஞர், ஜெயலலிதாவை விட விஜய் பெரிய தலைவரா? சீமான் கேள்வி appeared first on Dinakaran.