சென்னை: கோவையில் அக்டோபர் 27ல் ஈஷா யோகா மையத்திற்கு ஆதரவாக நடந்த கூட்டத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ஓம்கார் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி, மனுதாரர் தான் பேசியதற்கு மன்னிப்பு கோரினால் அது பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்து காவல்துறை கைது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து வாய்மொழி உத்தரவை பிறப்பித்திருந்தார்.
இந்த மனு நேற்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓம்கார் பாலாஜி தரப்பில் மன்னிப்பு கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவில், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் மன்னிப்பு கோருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை மாற்றி தானாக முன்வந்து நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக குறிப்பிட்டு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மனுவை மாற்றி தாக்கல் செய்ய சம்மதிக்கவில்லை. இதையடுத்து, முன் ஜாமீன் வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதி விசாரணையை நவம்பர் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதையடுத்து, மாலை 5 மணிக்கு நீதிமன்றத்திற்கு சென்ற ஓம்கார் பாலாஜி, என்னை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர், காலை சரணடைகிறேன் என்று கோரினார். அரசு வழக்கறிஞர் சந்தோஷ், நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்காததால் இனி போலீசார்தான் முடிவெடுப்பார்கள் என்றார். அப்போது, நீதிபதி, இப்போது நிவாரணம் கோர முடியாது என்று தெரிவித்தார். இதையடுத்து, ஓம்கார் பாலாஜி வழக்கறிஞர்கள் சங்க அறைக்கு சென்றார்.
கைது செய்ய எந்த தடை உத்தரவும் இல்லாததால் ஓம்கார் பாலாஜியை கைது செய்ய கோவை போலீசார் தயாராகினர். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் செல்லக்கூடிய அனைத்து வாயில்களிலும் போலீசார் நிறுத்தப்பட்டனர். ஓம்கார் பாலாஜி உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள தனது வழக்கறிஞர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அவர் வெளியில் வந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இன்று காலையில் அவர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
The post வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய வழக்கு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த அர்ஜூன் சம்பத்தின் மகன் அதிரடி கைது: நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காததால் ஐகோர்ட் கைவிரிப்பு appeared first on Dinakaran.