துளித்துளியாய்…

* இந்தியா இல்லேன்னா சாம்பியன்ஸ் டிராபியே இல்லை
சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள், வரும் 2025 பிப்ரவரியில் பாக்.கில் நடக்க உள்ளன. ஆனால், பாக்.கில் நடக்கும் போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என, பிசிசிஐ திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதனால், போட்டி அட்டவணையை வெளியிட முடியாமல் சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) திணறி வருகிறது. பாக்.கில் நடக்கும் போட்டிகளில் இந்தியா பங்கேற்க விரும்பவில்லை என, பாக் கிரிக்கெட் வாரியத்திடம், ஐசிசி தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ‘இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கா விட்டால், பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளே நடக்காது’ என, முன்னாள் இந்திய துவக்க வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

* நடப்பு சாம்பியன் வெற்றி
ஆசிய சாம்பியன்ஷிப் பெண்கள் ஹாக்கிப் போட்டியின் 8வது தொடர் பீகார் மாநிலம் ராஜ்கிரில் நேற்று தொடங்கியது. நடப்பு சாம்பியன் இந்தியா, சீனா, ஜப்பான், கொரியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் பங்கேற்றுள்ளன. முதல் நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியா-மலேசியா பெண்கள் அணிகள் மோதின. அதில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்திய வீராங்கனைகள் சங்கீதாகுமாரி 2 கோல்களும், உதிதா, பிரீத்தி துபே ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். இன்று நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் இந்தியா-கொரியா அணிகள் களம் காணுகின்றன.

* மோட்டார் பந்தயத்துக்கு ரசிகர்களை ஈர்க்க திட்டம்
இந்திய மோட்டார் விளையாட்டு சங்கங்கள் கூட்டமைப்பின் (எப்எம்எஸ்சிஐ) புதிய தலைவர் அரிந்தம் கோஷ் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ‘இந்தியாவில் பைக், கார் பந்தயங்களை பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வோம். மற்ற விளையாட்டுகளை போன்று, மோட்டார் பந்தயங்களை நோக்கி ரசிகர்களை ஈர்க்க தேவையான உத்திகளை கையாள்வோம். இளம் வீரர்களை தேர்வு செய்து பயிற்சி அளிப்பதுடன், பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்களும் நடத்த உள்ளோம்’ என்றார்.

The post துளித்துளியாய்… appeared first on Dinakaran.

Related Stories: