யுரோ கோப்பை பெண்கள் கால்பந்து முதல் முறையாக பைனலில் ஸ்பெயின்

ஜூரிச்: ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான 14வது யுரோ கோப்பை பெண்கள் கால்பந்துப் போட்டி சுவிட்சர்லாந்தில் நடக்கிறது. ஜூரிச்சில் நேற்று நடந்த 2வது அரையிறுதியில் முன்னாள் சாம்பியன் ஜெர்மனி, ஸ்பெயின் அணிகள் மோதின. இதுவரை நடந்த 13 யுரோ கோப்பை தொடர்களில் ஜெர்மனி 8 முறை கோப்பையை வசப்படுத்தியது. அந்த உற்சாகத்தில் ஸ்பெயின் அணியை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் இரு அணிகள் வீராங்கனைகள் கோல் போட முனைப்பு காட்ட ஆட்டத்தில் அனல் பறந்தது. இருப்பினும் இரு அணிகளின் தற்காப்பு ஆட்டக்காரர்கள், கோல்கீப்பர்களின் அபார ஆட்டத்தால் முழு ஆட்டமும் கோலின்றி சமனில் முடிந்தது. இதனால் கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதில் 113வது நிமிடத்தில் ஸ்பெயின் வீராங்கனை டெல் காஸ்டில்லோ, ஜெர்மனியின் தற்காப்பு அரணை கடந்து தந்த பந்தை சக வீராங்கனை ஐதானா போன்மடி கண்ணிமைக்கும் நேரத்தில் கோலாக மாற்றினார்.

அதனால் ஸ்பெயின் ரசிகர்களின் உற்சாகத்தால் அரங்கமே அதிர்ந்தது. அதன்பிறகு எஞ்சிய 7 நிமிடங்களில் கோலடிக்க இரு அணிகளும் மேற்கொண்ட முயற்சிகளுக்கும் பலன் கிடைக்கவில்லை. இதனால் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்று முதல் முறையாக பைனலுக்கு முன்னேறியது. ஜூலை 27ம் தேதி நடக்கும் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை ஸ்பெயின் எதிர்கொள்கிறது.

The post யுரோ கோப்பை பெண்கள் கால்பந்து முதல் முறையாக பைனலில் ஸ்பெயின் appeared first on Dinakaran.

Related Stories: