மேலே இருபுறமும் விண்ணில் மிதந்தவாறு ஈசனைப் போற்றும் நிலையில் உள்ள சூரிய சந்திரர் உருவங்கள் இடம் பெற்றுள்ளன. அடுத்து கீழாக வலப்புறம் ஒருவரும் இடப்புறம் இருவரும் என மூன்று தேவர்கள் அமர்ந்தவாறு சிவபெருமானைப்போற்றுகின்றனர். மூன்றாம் வரிசையில் வலப்பக்கம் கரம் கூப்பிய நிலையில் மாலவன் நிற்க அருகே ஒருவர் காணப்பெறுகின்றார். இச்சிற்பம் சற்று சிதைந்துள்ளது. எதிர்ப்புறம் மாலையுடன் திகழும் சிவலிங்கம் முன்பு அமர்ந்தவாறு திருமால் சிவபூசை செய்கின்றார். கீழ் வரிசையில் நான்கு அடியார்கள் அமர்ந்தவாறு ஈசனை வணங்கிப் போற்றுகின்றனர்.
கோஷ்டமாடத்தின் மேற்புறம் கொற்றக் குடையும் இணை சாமரங்களும் காணப் பெறுகின்றன. சடா மகுடத்துடன் திகழும் பரமேஸ்வரன் சுகாசன கோலத்தில் ஒரு காலை மடித்தும் ஒரு காலைத் தொங்கவிட்ட நிலையிலும் அமர்ந்துள்ளார். பெருமானின் ஒரு காதில் பத்ரகுண்டலமும் மறுகாதில் மகரக் குழையும் காணப்பெறுகின்றன. வலமேற்கரத்தில் மழுவும், இடமேற்கரத்தில் மானும் திகழ இடக்கரத்தைக் காலின்மீது அமர்த்தியவாறு வலக்கரத்தில் திருமாலிடம் அளிப்பதற்காக சக்கரத்தை உள்ளங்கையில் ஏந்தியுள்ளார். அம்மையோ வலக்கரத்தில் மலரொன்றினை ஏந்தியவண்ணம் இடக் கரத்தைத் தொங்கவிட்ட இடக்காலின் மேல் வைத்தவாறு ஈசனோடு அமர்ந்துள்ளார். மாலவன் சக்கரம் (ஆழி) பெற்ற புராண வரலாறு அறிந்தாலன்றி எழிலார் இக்காட்சியின் சிறப்புகளை நாம் இனிதே சுவைக்க இயலாது. அப்புராண வரலாற்றை இனிக் காண்போம்.
சிவபெருமானின் எட்டு வீரச்செயல்களுள் (அட்டவீரம்) ஒன்று சலந்தரன் என்னும் அரக்கனைத் தான் படைத்த சக்கரத்தால் பிளந்ததாகும். பரமனுடன் போரிட சலந்தரன் வந்தபோது, தன் கால்விரலால் தரையில் ஒரு சக்கர உருவத்தை வரைந்தார். உடன் அச்சக்கரம் சுடராழியாக மேலெழுந்து சலந்தரனின் உடலை இரண்டாகப் பிளந்தது. சிவனாரின் பத்து ஆயுதங்களுள் ஒன்று ஆழியாகும். அதற்குரிய தேவர் சக்ராயுத புருடர் என அழைக்கப் பெற்றார். தஞ்சைக் கோயில் ஸ்ரீவிமானத்து காவலர்களில் ஒருவராக சக்கராயுத புருடர் திகழ்கின்றார். திருப்புகலூர் திருக்கோயிலில் திகழும் தசாயுத புருடராம் செப்புத் திருமேனிகளுள் ஒன்றாக ஆழித்தேவரின் திருவுருவம் இடம்பெற்றுள்ளது.
அரன் படைத்த ஆற்றல்மிகு சக்கரம் தனக்கு வேண்டுமெனக் கருதிய திருமால் அதனைப் பெற வேண்டி சிவபூசை செய்ய விழைந்தார். தேவதச்சனான விசுவகர்மாவைக் கொண்டு ஒரு விமானம் செய்வித்து அதனைப் பூமிக்கு எடுத்து வந்து திருவீழிமிழலை (சோழநாட்டில் உள்ளதோர் தேவாரத் தலம்) என்னும் ஊரில் வைத்து வீழீசரை அதில் பிரதிட்டை செய்து நாளும் ஆயிரம் தாமரை மலர் கொண்டு அர்ச்சித்து வந்தார். ஒருநாள் பூசையின்போது பூசைக்குரிய ஆயிரம் தாமரை மலர்களில் ஒரு மலர் குறைந்திருந்தது.
மாலவனோ உடன் தன் கண்மலரை எடுத்து தாமரையாகப் பாவித்து பூசனையை முடித்தான். அப்போது மகிழ்ந்த வீழீசர் திருமால் பூசித்த இலிங்கத் திருமேனியிலிருந்து தன் உருக் காட்டி, பூதகணம் ஒன்றின் மூலமாகத் தான் முன்னர் சலந்தரனை வதம் செய்யப் படைத்த ஆழியை எடுத்து வரச் செய்து மாலுக்கு அளித்தார். அன்று மாலவன் பெற்ற ஆழியே அவன் திருக்கரத்தில் நிலைபெற்றது. மாலவன் பூமிக்குக் கொணர்ந்த விமானமே திருவீழிமிழலையிலுள்ள விண்ணிழி விமானமாகும். திருவீழிமிழலைத் தலபுராணம் இப்புராண வரலாற்றை விரிவுற எடுத்துரைக்கின்றது. சிவ மகாபுராணமும் இவ்வரலாறு பேசும்.
சலந்தராசுரனைப் பிளக்கப் படைத்த ஆழியே மாலவனுக்கு வழங்கப் பெற்ற திகிரி என்பதையும், திருவீழிமிழலையில் தன் கண் மலரையே தாமரை மலராக அர்ச்சித்து அதனைப் பெற்றான் என்பதையும் தேவாரப் பனுவல்கள் இனிதே உரைக்கின்றன. திருவீழிமிழலையில் திருப்பதிகம் பாடிய திருஞானசம்பந்தப் பெருமானார்,
“தரையொடு திவிதலம் நலிதருதிறன் உறு சலதரனது
வரையன தலைவிசையொடு வருதிகிரியை அரிபெற
அருளினன்
உரைமலி தரு சுரநதி மதிபொதி சடையவன் உறைபதி – மிகு
திரைமலி கடல்மணல் அணிதரு பெருதிடர்வளர் திருமிழலையே’’
– என்றும்,
“தருப்பம் மிகு சலந்தரன் தன் உடல் தடிந்த சக்கரத்தை வேண்டி, ஈண்டு
விருப்பொடு மால் வழிபாடு செய்ய இழி விமானம் சேர் மிழலையாமே’’
– என்றும் இவ்வரலாற்றைக் குறிப்பிட்டுள்ளார்.
திருநாவுக்கரசு பெருமானாரோ,
“நீற்றினை நிறையப் பூசி நித்தல் ஆயிரம் பூக்கொண்டு
எற்றுழி ஒருநாள் ஒன்றுகுறையக் கண் நிறைய இட்ட
ஆற்றலுக்கு ஆழிநல்கி அவன் கொணர்ந்து இழிச்சும் கோயில்
வீற்றிருந்து அளிப்பர் – வீழி மிழலையுள் விகிர்தனாரே’’
என்று பாடி இவ்வரலாற்றை எடுத்துரைத்துள்ளார்.
ஆரூரரான சுந்தரமூர்த்தி சுவாமிகளோ;
“அருமலரோன் சிரம் ஒன்று அறுத்தீர்
செறுத்தீர் அழல் சூலத்தில் அந்தகனை
திருமகள் கோன் நெடுமால் பலநாள்
சிறப்பு ஆகிய பூசனை செய்பொழுதில்
ஒருமலர் ஆயிரத்தில் குறைவா
நிறைவாக ஒரு கண்மலர் சூட்டலுமே
பொரு விறல் ஆழிபுரிந்து அளித்தீர்
பொழில் ஆர் திருப்புத்தூர் புனிதணீரே
செருமேவு சலந்தரனைப் பிளந்த சுடர் ஆழி
செங்கண்மால் பங்கயமாச் சிறந்தானுக்கு அருளி’’
– என்றும் பதிகம் பாடி இப்புராண வரலாற்றின் சிறப்புரைத்துள்ளார்.
புராணங்களும், நாயன்மார்களும் குறிப்பிடும் மாலவன் ஆழி பெற்ற வரலாற்றை தமிழகச் சிற்பிகள் பல்லவர் காலந்தொட்டு சிவாலயங்களில் சிற்பக் காட்சிகளாக வடித்துக் காட்டினர். திருமால் தாமரை மலர்கொண்டு ஆழிபெற பூசனை செய்யும் காட்சி ஒன்று காஞ்சி கயிலாயநாதர் கோயிலில் சிறப்புற வடிக்கப் பெற்றுள்ளது. தஞ்சைப் பெருங்கோயிலில் உள்ள தேவகோஷ்டம் ஒன்றில் இலிங்க உருவத்திலிருந்து சிவ பெருமான் வெளிப்போந்து மாலவனுக்கு ஆழி நல்கும் வரலாறு சித்திரிக்கப்பெற்றுள்ளது. அதனை ஒத்தே இங்கும் மாலவன் சிவலிங்கத்தைப் பூசிப்பது, சிவன் உமையோடு தோன்றி சக்கரம் அருளுவது ஆகிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
The post மாலவனுக்கு ஆழி ஈந்த பெருமான் appeared first on Dinakaran.