×

புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் இயக்கம்: முறையான அறிவிப்பு இல்லாததால் மக்கள் கடும் அவதி

நாமக்கல், நவ.11: நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்ட் நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்த நிலையில், முறையான அறிவிப்பு இல்லாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பயணிகளை ஏற்றி இறக்குவதில் குழப்பம் நிலவியது. இஷ்டத்திற்கு கண்ட இடங்களில் ஏற்றி, இறக்கிச் சென்றதை காண முடிந்தது.

நாமக்கல் மாநகராட்சி 2வது வார்டு முதலைபட்டியில், ₹19.50 கோடியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 22ம் தேதி திறந்து வைத்தார். புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று காலை முதல் புறநகர் பஸ்கள் இயக்கப்பட்டது. அதிகாலை 4.30 மணி முதல் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு புறநகர் பஸ்கள் வரத்தொடங்கின. இங்கிருந்து பயணிகளுடன் வெளியூர்களுக்கு புறப்பட்டு சென்றன. பெரும்பாலான பயணிகளுக்கு பஸ் ஸ்டாண்ட் இடமாற்றம் செய்யப்பட்ட விபரம் தெரியவில்லை. இதனால், அவர்கள் பழைய பஸ் ஸ்டாண்ட் சென்று, பின்னர் புதிய பஸ் ஸ்டாண்ட் வந்தனர். பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து புதியதாக டவுன் பஸ்கள் இயக்கப்படவில்லை. ஏற்கனவே செல்லும் ராசிபுரம் டவுன் பஸ்கள் தான், புதிய பஸ் ஸ்டாண்டுக்கு இயக்கப்பட்டது.

இதேபோல், அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்களுக்கும், புதிய பஸ் ஸ்டாண்ட் மாற்றப்பட்டுள்ள தகவல் முழுமையாக சென்றடையவில்லை. இதனால், அவர்களும் நாமக்கல் நகரில் உள்ள பழைய பஸ் ஸ்டாண்டுக்கு, நேற்று அதிகாலை பஸ்களை ஓட்டி வந்தனர். அங்கிருந்த போலீசார், பஸ்களை புதிய பஸ் ஸ்டாண்டுக்கு செல்லும்படி அனுப்பி வைத்தனர். திருச்சி, துறையூர், சேந்தமங்கலம், மோகனூர் போன்ற ஊர்களில் இருந்து வரும் பஸ்கள், எங்கு நிறுத்த வேண்டும் என்பது குறித்த முறையான அறிவிப்பு இல்லை. இதனால், அந்த பஸ்கள் வருவாய் கோட்டாட்சியரின் இல்லம் அருகிலும், சில பஸ்கள் அண்ணா சிலை அருகிலும் நின்று பயணிகளை இறக்கி விட்டன.

இதேபோல், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்சி, துறையூர் செல்லும் பஸ்களிலும் நகரில் எங்கு நிறுத்தி பயணிகளை ஏற்ற வேண்டும் என்பதில் குழப்பம் நிலவியது. அந்த டிரைவர்கள் நகரின் பழைய பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயில், பஸ்கள் வெளியேறும் இடம் என இஷ்டத்துக்கு ஒரு இடத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி சென்றனர். இதனால், வெளியூர் செல்லும் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர். ஈரோடு, மதுரை, கரூர், கோவை போன்ற ஊர்களில் இருந்து வரும் புறநகர் பஸ்கள், வள்ளிபுரம், நல்லிபாளையம் பைபாஸ் வழியாக புதிய பஸ் ஸ்டாண்டுக்கு வந்தன. இதனால், நாமக்கல் நகருக்கு செல்ல முடியாமல் பயணிகள் அவதி அடைந்தனர். வெளியூரில் இருந்து நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்ட் வரும் புறநகர் பஸ்கள், அண்ணா சிலை, வள்ளிபுரம், கோஸ்டால் சாலை உள்ளிட்ட 5 இடங்களில் நின்று செல்லும். அங்கு பயணிகள் நிழற்கூடங்கள் அமைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால், நேற்று காலை வரை, அத்தகைய அமைப்புகள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை.

டிக்கெட் பரிசோதகர்கள் நாமக்கல் நகரின் பல இடங்களில் நின்று, பஸ்களை நிறுத்தி அனுப்பி வைத்தவாறு இருந்தனர். காலையில் ஒரு இடத்திலும், மாலையில் வேறு இடத்திலுமாக வெளியூர் பஸ்கள் நின்றதால், எங்கு சென்று பஸ் ஏறுவது என தெரியாமல் மக்கள் அவதி அடைந்தனர். புதிய பஸ் ஸ்டாண்டில், 51 பஸ்கள் நிறுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்டில் உள்ள 57 கடைகளுக்கும், பொது ஏலம் நடத்தப்பட்டு அதன் உரிமையாளருக்கு ஒதுக்கீட்டு ஆணை மாநகராட்சி நிர்வாகம் வழங்கியுள்ளது. ஆனால், நேற்று 5 கடைகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தது. இதனால், புதிய பஸ் ஸ்டாண்ட் வந்த பொதுமக்கள் டீ-காபி, கிடைக்காமல் சிரமத்திற்குள்ளாகினர். பஸ் ஸ்டாண்டில் உள்ள 2 ஓட்டல்களும் திறக்கப்படவில்லை.

புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகம் முழுவதும், சுகாதார வசதிகள் செய்யப்பட்டிருந்தது. குப்பை கழிவுகளை போடுவதற்காக தனி பெட்டிகளை மாநகராட்சி நிர்வாகம் வைத்திருந்தது. தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. புறக்கால் நிலையத்தில் போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், பஸ் ஸ்டாண்ட் மாற்றப்படுவது, மற்றும் எந்த பஸ்கள் எங்கு நிறுத்தப்படும். நகருக்குள் வரும் பஸ்கள் குறித்த விபரங்கள் முறையாக அறிவிக்கப்படாததால் முதல் நாளிலேயே மக்களிடம் பெரும் குழப்பமும், அதிருப்தியும் நிலவியது.

பைக் ஸ்டாண்டில் இலவச அனுமதி
நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் டூவீலர் மற்றும் கார் பார்க்கிங், மூன்று கட்டண கழிப்பிடம் ஆகியவற்றை நடத்தி கொள்ளும் உரிமத்தை, மாநகராட்சி பொது ஏலம் மூலம், பொன்னுசாமி என்பவருக்கு வழங்கியுள்ளது. நேற்று புதிய பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டுக்கு வந்ததை தொடர்ந்து, ஏராளமானோர் பஸ் ஸ்டாண்டை சுற்றிப் பார்ப்பதற்காக வந்தனர். அவர்களிடம் பைக்கை நிறுத்த, ஒப்பந்ததாரர் கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை. முதல் நாள் என்பதால் இலவசமாக நிறுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இதேபோல், கட்டண கழிப்பிடத்திலும் பொதுமக்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர். கட்டணம் வசூலிக்கப்படவில்லை. அங்கு உண்டியல்கள் வைக்கப்பட்டு, பொதுமக்கள் தங்கள் விருப்பப்படி அதில் காசு போடலாம் என மைக் மூலம் அறிவிக்கப்பட்டது.

The post புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் இயக்கம்: முறையான அறிவிப்பு இல்லாததால் மக்கள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Dinakaran ,
× RELATED காதல் விவகாரத்தில் ஐடி ஊழியர் கொலை?