×

வரும் 11ம் தேதி முதல் பஸ்கள் இயக்கம்

நாமக்கல், நவ.6: நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ்கள் இயக்குவதற்கான முன்னேற்பாடு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. நாமக்கல் அருகே முதலைப்பட்டியில் ரூ19.50 கோடியில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது. இதனை கடந்த 22ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து, பஸ்கள் இயக்குவது தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம், நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் உமா தலைமை வகித்தார். மேயர் கலாநிதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து எப்போது பஸ்கள் இயக்குவது என்பது குறித்தும், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. திருச்சி, துறையூர், மோகனூர், சேந்தமங்கலம் ஆகிய ஊர்களிலிருந்து வரும் பஸ்கள் நாமக்கல் அண்ணா சிலை அருகில் பயணிகளை இறக்கி விட்டு, ஏற்றிச்செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக அந்த இடத்தில் பயணிகள் நிழற்குடை அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதுபோல் மதுரை, சேலம், ஈரோடு, கோவை போன்ற ஊர்களிலிருந்து வரும் பஸ்கள், நாமக்கல் பயணிகளை இறக்கிவிட வள்ளிபுரம், நல்லிபாளையம் கோஸ்டல் ரெசிடென்சி ஓட்டல் அருகே என இரண்டு இடங்களிலும் புதிய நிழற்குடைகள் அமைப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

வரும் 8 அல்லது 11ம் தேதியில், புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ்களை இயக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதற்கு முன்பாக, போக்குவரத்து போலீசார், பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டிய இடங்களில் நேரடியாக ஆய்வு செய்து பஸ் ஸ்டாப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்கவும் கலெக்டர் அறிவுறுத்தினார். புதிய பஸ் ஸ்டாண்டில் 57 கடைகள், 2 ஓட்டல்கள் உள்ளன. இவைகளுக்கு பொது ஏலம் நடத்தி முடிக்கப்பட்டது. எனவே, கடை நடத்த மாநகராட்சி மூலம் உரிமம் பெற்றவர்கள் உடனடியாக கடைகளை திறக்க மாநகராட்சி அலுவலர்கள் ஏற்பாடு செய்ய வேண்டுமென கலெக்டர் மாநகராட்சி அலுவலர்களை அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் துணை மேயர் பூபதி, மாநகராட்சி பொறியாளர் சண்முகம், ஏடிஎஸ்பி தனராசு, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகன், முருகேசன், தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஜோதி குப்புசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்ற தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் ஜோதி குப்புசாமி பேசுகையில், ‘திருச்சி, துறையூர், மோகனூர், சேந்தமங்கலம் ஆகிய ஊர்களிலிருந்து வரும் பஸ்கள், நாமக்கல் நகரில் தற்போதுள்ள பஸ் ஸ்டாண்ட் பிரதான சாலை வழியாக நேராக புதிய பஸ் ஸ்டாண்டிற்கு இயக்க அனுமதிக்க வேண்டும். கோட்டை ரோடு சுற்றி செல்வதால் கால தாமதமும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. நாமக்கல் நகரில் இருந்து 6 கிமீ., தொலைவில் புதிய பஸ் ஸ்டாண்ட் உள்ளது. கோட்டை ரோட்டை சுற்றி சென்றால் மேலும் அரை கி.மீ., அதிகமாகும். எனவே, பஸ் ஸ்டாண்ட் பிரதான சாலையில் இருந்து நேராக இயக்க அனுமதித்தால், தனியார் பஸ்கள் குறிப்பிட்ட நேரத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் செல்ல முடியும்’ என்றார். இதற்கு பதிலளித்த மாவட்ட கலெக்டர் உமா, ‘இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார், பஸ் ஸ்டாண்ட் பிரதான சாலையை நேரில் ஆய்வு செய்து முடிவு செய்வார்கள்’ என்றார்.

The post வரும் 11ம் தேதி முதல் பஸ்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Dr. ,Kalainar ,Mudalaipatti ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED காதல் விவகாரத்தில் ஐடி ஊழியர் கொலை?