×

பிஸியோதெரப்பி அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர்

‘‘உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்”.

மருத்துவத்தை நன்கு கற்றறிந்தவர் , நோயாளியின் நோயைப் போக்க முயலும்போது நோயாளியின் வயது , அந்நோய் வந்திருக்கும் காலம் , நோயைப் போக்க தனக்கு தேவையான காலம் ஆகியவற்றை ஆராய்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று குறள் கூறுகின்றது.

உலகில் எந்தவித மருத்துவத்தை எடுத்துக் கொண்டாலும் இதுதான் அடிப்படை.மருத்துவ விஞ்ஞானம் வளர வளர புதிய புதிய மருத்துவப் பிரிவுகளும் உருவாகிக் கொண்டே உள்ளது. இதனால் , ஒவ்வொரு உறுப்பின் நோய்க்கான காரணிகளை கண்டறிந்து சிறப்புச் சிகிச்சை பெற முடிகிறது.அதில் பிஸியோதெரபி எனப்படும் இயன்முறை மருத்துவம் அல்லது உடலியக்க மருத்துவம் மிக வேகமான வளர்ச்சி பெற்று வருகிறது. இருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு இதைப்பற்றி போதிய விழிப்புணர்வு இல்லை.முதல் உலகப்போரின்போது காயமுற்ற இராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலிருந்து உலகில் இத்துறையின் தேவை உண்டானது..

1952 ம் வருடம் போலியோ தொற்றின் போது பிஸியோதெரபியின் தேவை மேலும் அதிகரித்தது, அப்போது தான் இந்தியாவில் மும்பை மாநகரத்தில் சிகிச்சை மையத்தை நிறுவினர் , அதன் பின்பு பிசியோதெரபி கல்விக்கூடமும் துவங்கப்பட்டது…

72 ஆண்டுகள் கடந்தும் இன்னும் 56% சதவிகித்தினர் மட்டுமே இச்சிகிச்சை முறையைப் பற்றி ஓரளவு விழிப்புணர்வை பெற்றுள்ளனர் என்று ஒரு ஆய்வு கூறு
கிறது, இது கொஞ்சம் வருத்தம் அளிக்கும் விடயம் தான்.

மகப்பேறு மற்றும் மகளிர் நலம்,
எலும்பு மற்றும் மூட்டு ,
நரம்பியல்,
முதியோர் நலம்,
குழந்தை நலம்,
விளையாட்டு ,
உடலியக்கம் மற்றும் மறுவாழ்வு போன்ற பிரிவுகள் இத்துறையில் உள்ளது.

படித்து , பயிற்சி பெற்ற இயன்முறை மருத்துவர்கள் நோயாளியின் நோயைக் கண்டறிந்து (diagnosis),நோயை மதிப்பீடு செய்து (Assessment), பின்பு நோயிற்கான தகுந்த சிகிச்சையை (Treatment)அளிப்பர்.அறுவைசிகிச்சை முடிந்த பின்பும், உடலியக்கம் பாதிக்கப்பட்டாலோ , விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயத்திற்கு பின்பு பிசியோதெரபியின் மறுவாழ்வு பயிற்சிகள் சிகிச்சைகள்(Rehabilitation )மிகவும் இன்றியமையாதது.இன்று , விளையாட்டுத் துறையில் பிசியோதெரபியின் பங்கு அளப்பரியது.

உடலில் 206 எலும்புகள், அதின்மேல் 600க்கும் மேற்பட்ட தசைகள்.இத்தசைகள், எலும்பு மூட்டுகள் ஒவ்வொன்றிற்கும் தனிப்பட்ட செயல்பாடுகள், அமைப்புக்கள் அவற்றின் நோய்க்கூறுகள், காரணிகள், அறிகுறிகளை எவ்வாறு அறிந்து கொண்டு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதை இத்தொடரின் மூலம் அறிந்து கொள்ளுவோம்.
‘ தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் ‘

‘தலைவலி போய் திருகு வலி வந்தது’
‘இங்க அடிச்சா, அங்க வலிக்கும்’
‘ எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’

இதெல்லாம் சினிமாவுல வர பஞ்ச்சோ , பழமொழியோ மட்டுமில்லை, நமது உடலை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் நம் உடல் பேசும் மொழிகளுமே.

அடிபட்டதும் முதல்ல ஐஸ்தான் வைக்கணுமா, ஏன்?!

கழுத்த திருப்பவே முடியல இன்னைக்கு பார்த்து ஆபிசில் ஆடிட்டிங் ?

புள்ள பெத்தப்ப நடுமுதுகுல ஊசி போட்டது இத்தனை வருசமாகியும் என் பொண்டாட்டி இன்னும் வலிக்குதுன்னு சொல்றாங்க…. நாளைக்கு பரீட்சை எழுதப் போறான் பையன் இப்ப கை வலின்னு சொல்றானே …

கால் வலியோடயே நடக்க சொல்றாங்க அதெப்படி முடியும்?

இதுபோல் ஆயிரம் சந்தேகங்கள், அன்றாட வாழ்வில் , வேலைகளில் பிரச்சினையை உண்டாக்கும் வலி போக்க வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்போம்.
வலி என்பது ஒரு நோயா இல்லை அறிகுறியா?

ஒரு நோய்க்கான காரணிகள் பலவாக இருக்கலாம் அல்லது காரணிகள் சரியாக அறியாமலும் இருக்கலாம் ஆனால் பெரும்பாலான நோயிற்கான அறிகுறி ‘வலி’யாகத்தான் இருக்கும்.
ஒரு சிறந்த மருத்துவர் நோயாளி நடந்து வருவதை வைத்தே அவருக்கு என்ன பிரச்சனை உள்ளது என்பதை ஓரளவு கண்டறிந்துவிடுவார் என எங்களுக்கு பாடம் நடத்திய உடற்கூறியல் மருத்துவப் பேராசிரியர் கூறுவார்.வலி – என்றால் வலிமை, ஆற்றல் என்ற பொருளிலும் ,வேதனை , அவஸ்தை என்ற பொருளும் தரும் உடலில் காயங்களினாலோ உடற்குறைபாடு ,உடற்நலக் குறைபாடினாலோ உண்டாகும் ஒருவித விரும்பத்தகாத ,தாங்க இயலாத உணர்வைத்தான் வலி என்கிறோம்.

நம் உடலை கூர்மையான ஊசியை வைத்து குத்துகிறோம் அல்லது ஓர் இரும்பு போன்ற கனமான பொருளில் இடித்து கொள்கிறோம் உடனே நமது உடலானது நரம்பு முடிச்சுகளின் மூலம் அதை அறிந்துகொண்டு, நரம்பு இழைகளின் வழியாக முதன்மை நரம்புக் கடத்தியின் மூலம் தண்டுவடத்திற்கு சமிக்ஞையை அனுப்புகிறது. அங்கிருந்து இரண்டாம் நரம்பு கடத்தி வழியாக முன் மூளைப் பகுதியான தலாமஸிற்கு சென்றடைந்து, மேலும் மூன்றாம் கடத்தி வழியாக பெருமூளையை சென்றடைந்த பின்பு தான் நாம் அதை வலி என்று உணர்கிறோம்.

வலியின் சமிக்ஞை சென்ற பாதையை அதாவது வலியின் வழியை வைத்து வலியை போக்கும் தீர்வை 1965ல் மெல்சாக் மற்றும் வால் (Melzack and Wall) என்பவர்கள் வலி ஏற்பட்ட இடத்திற்கு அருகில் /இடத்தில் வேறு ஒரு உணர்வினை தூண்டுவதின் மூலம் வலிக்கான நிவாரணம் அல்லது வலியை குறைக்கும் வழிமுறையைக் கண்டறிந்தனர். இது Pain Gate control theory எனப்படும். உதாரணமாக உடலில் எங்காவது இடித்துக் கொண்டால் உடனே அனிச்சை செயலாக அடிபட்ட இடத்தை தேய்த்துக் கொள்வோம்.தலைவலி என்றால் வலிக்கு தைலம் போட்டு ஒத்தடம் போல் அழுத்தம் கொடுப்போம்.

இவ்வாறு தேய்த்தல்,அழுத்தம் கொடுப்பது ,ஒத்தடம் தருவது போன்ற செய்கைகளினால் தூண்டப்படும் சமிக்ஞையானது வேறு ஓர் உணர்வு கடத்தியின் மூலம் தண்டுவடத்திற்கு சென்று ,அங்கு சில வேதியியல் மாற்றங்கள் ஏற்பட்டு வலி உணர்வானது தலாமஸிற்கு சென்றடைவதோடு நிறுத்திக் கொள்கிறது பெருமூளையைச் சென்றடைவதை தடுக்கிறது. வலியும் உணரப்படுவதில்லை.
இந்த அடிப்படையில் தான் வலி நிவாரண மருந்துகள் மற்றும் வலி நீக்கும் சிகிச்சை முறை மனித உடலில் செயல்படுகிறது. ஆங்கிலத்தில் pain,ache, என்பதைப் போல மருத்துவ மொழியில் ‘algia’ என்று கூறுவோம்.

[எ.கா] CEPHALGIA -Headache -தலைவலி
ARTHRALGIA-Joint pain -மூட்டுவலி
MYALGIA -Muscle pain -தசைவலி
வலியே பெரும், வேதனை அவஸ்தை தரும் போது அதனால் ஏதேனும் நன்மை உண்டா? ஆம், உண்டு.

* வலி என்பது ஒரு எச்சரிக்கை சமிக்ஞை
* பாதிப்பு ஏற்பட்ட பகுதியை மேலும் சேதம் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
* பாதிப்பு ஏற்பட்ட நபரை ஓய்வு எடுக்க வலியுறுத்தும்
* உடனடியாக சரியான மருத்துவம் செய்ய உதவுகிறது.

வலிக்கான பல்வேறு வரைமுறைகள்,அதன் வகைகளை இணையத்தில் தேடினாலே காணக் கிடைக்கும். மருத்துவரிடம் சென்றதும் வலிக்கான காரணிகளை கேட்டறியும் போது எப்படி எந்த மாதிரி வலிக்குது என்ற ஒரு கேள்வியை கேட்பார்.வலின்னா அதிக அளவில், குறைந்த அளவு அவ்வளவுதான் இதில் என்ன விதவிதமான வலி என்று கேட்கலாம்.வலியின் விதத்தை தன்மையை வைத்தே நோயை ஓரளவு கணிக்க முடியும் என்பதாலேயே மருத்துவர் இந்தக் கேள்வியைக் கேட்பார்…உடனே நாம் ,ஊசி குத்துவதைப் போல வலி, கால் குடைச்சல், எரிச்சல் என்று கூறுவோம் சரி அப்படி எத்தனை வித வலிகள் தான் உள்ளன..

வலியின் தீவிரத்தை வைத்து பொதுவாக

கடுமையான வலி(acute)

நாள்பட்ட/தீவிரமான வலி (chronic) , என வகைப்படுத்தலாம்.

அவற்றில் சில,
அக்யூட் (Acute) :

கடுமையான வலி , காயம் ஏற்பட்ட உடனே உண்டாகும் வலி இது சிறிது நேரத்திற்கோ அல்லது கொஞ்ச நாட்களுக்கோ நீடிக்கும்…

க்ரானிக் (Chronic):
நாட்பட்ட /தீவிரமான வலி , 6 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து வலி
நீடிக்கும்….

வலியின் தன்மையின் படி

ரெபர்டு பெயின் (Referred pain):

குறிப்பிடப்பட்ட வலி , நோய் அல்லது
காயம் உண்டானது ஒரு உறுப்பிலும் அதன் வலி அதற்கு தொடர்புடைய உடலின் வேறொரு பகுதியிலும் ஏற்படும் .

ரேடியேட்டிங் பெயின் (Radiating pain):

நரம்பு மற்றும் நரம்புகளின் வேர்ப்பகுதிகளில் ஏற்படும் தொந்தரவுகளினால் உண்டாகும் வலி.எ.கா: சியாடிக் நரம்பினை லம்பார் டிஸ்க் அழுத்துவதால் உண்டாகும் வலி.
இவ்வாறு நோய்க் கூறின் ஒரு காரணியான வலியின் தன்மை தீவிரத்தை வைத்து தான் அடுத்து பரிசோதனைகள் மேற்கொண்டு, உடலின் பிரச்சினை கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படும்.இனி வரும் தொடர் கட்டுரைகளில் எலும்பு, மூட்டு, தசைகளில் உண்டாகும் வலிகள் , அதற்கான காரணிகள், வரும்முன் காக்கும் தீர்வுகளைக் கண்டறிவோம்…

இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி

தொகுப்பு: ஸ்ரீ

The post பிஸியோதெரப்பி அறிவோம்! appeared first on Dinakaran.

Tags : Saffron ,Dinakaran ,
× RELATED 16 வயதில் ஸ்டாடர்டப் நிறுவனம்!