×

கவுன்சலிங் ரூம்

நன்றி குங்குமம் டாக்டர்

மருத்துவப் பேராசிரியர் முத்தையா

என் மனைவிக்கு 40 வயது. இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அரசு ஊழியர். அவள் தினமும் இரண்டு, மூன்று மணி நேரம் மட்டுமே தூங்குகிறாள். கேட்டால், தூக்கம் வரவில்லை என்கிறாள். இதற்குக் காரணம் என்ன?

– ராஜநாராயணன், தேன்கனிக்கோட்டை.

மன அழுத்தத்தால், இப்படியான தூக்கம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படலாம். நல்ல உறக்கமே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படை என்பதால், இந்தப் பிரச்னையை தட்டிக் கழிக்க வேண்டாம். தூக்கத்துக்கான வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்றச் சொல்லுங்கள். உதாரணமாக தினமும் எளிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம். தூக்கத்துக்கான நேரத்தை நெறிப்படுத்த வேண்டும். டீ, காபி அதிகம் குடிக்கும் பழக்கம் இருந்தால், அதைக் கைவிடவேண்டியது அவசியம். இரவு உணவை, படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னரே முடித்துக்கொள்ளவும். படுக்கையில் மொபைல், லேப்டாப், மூக்குக்கண்ணாடி போன்றவை இல்லாமலிருப்பது நல்லது. தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே டிஜிட்டல் சாதனங்களை தூரமாக வைத்துவிடவும்.

தூங்கும்போது, ஒருபக்கமாகச் சாய்ந்து படுக்காமல், முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி மல்லாக்கப் படுப்பது நல்லது. 40 வயது பெண் என்பதால், அவர் தற்போது மெனோபாஸ் காலத்தில் இருக்கக்கூடும். மெனோபாஸ் காலத்தில் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவது வழக்கம். முக்கியமாக, இந்தக் காலகட்டத்தில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் சுரப்புகள் குறையத் தொடங்கும். உடலுக்குத் தூக்கத்தை கொடுக்கும் அடிப்படை ஹார்மோன்களான இவை குறைவதால்கூட தூக்கமின்மை பிரச்னை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. தேவைப்படும்பட்சத்தில் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

எனக்கு உதட்டைச் சுற்றிலும் சிறு சிறு தடிப்புகளாக ஏற்படுகிறது. வீட்டுப் பெரியவர்கள், ‘பல்லி எச்சம்’ என்று இதைச் சொல்கிறார்கள். உண்மையில் இது எதனால் ஏற்படுகிறது… எப்படிச் சரிசெய்வது?
– சுபிதா, கும்மிடிப்பூண்டி

நீர்க்கொப்புளங்கள்போல ஏற்படுவதுதான், `பல்லி எச்சம்’ எனக் குறிப்பிடப்படுகிறது. அது ஒரு வகை தொற்றுநோய். Herpes Simplex Virus (HSV) என்ற வைரஸ் கிருமியால் ஏற்படும். ஐந்தாறு நாட்களுக்குள் குணமாகிவிடும். இந்த பாதிப்பு இருக்கும்போது உணவு மற்றும் தண்ணீரைப் பகிர்ந்துகொள்வது, குழந்தைகளை முத்தமிடுதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், சத்தான உணவுகள், பழ வகைகள் போன்றவற்றை உண்ண வேண்டும். நீர்க்கொப்புளங்கள் இல்லாமல் வெறும் தடிப்பு மட்டும் இருந்தால், அது அலர்ஜியாக இருக்கலாம். எந்தெந்த உணவுகளைச் சாப்பிடும்போது இது ஏற்படுகிறது என்பதைத் தெரிந்துகொண்டு அவற்றைத் தவிர்க்கவும். வெறும் தடிப்புகளாக மட்டும் இருந்தால், மருத்துவரிடம் கேட்டு அலர்ஜி மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் போதும். அப்படியும் சரியாகாவிட்டால், சரும மருத்துவரிடம் முறையான சிகிச்சை பெறவேண்டியது அவசியம்.

எனக்குக் குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் ஆகின்றன. வீட்டுப் பெரியவர்கள் குழந்தைகளைக் குளிக்கவைக்கும்போது தலையை அழுத்துவது, முதுகில் தண்ணீர் அடிப்பது, மூக்கைத் தூக்கிவிடுவது, மார்பகத்தை அழுத்திப் பால் எடுப்பது, பிறப்பு உறுப்பை இழுத்துவிடுவது போன்ற செயல்களைச் செய்யச் சொல்கிறார்கள். மருத்துவ முறைப்படி இவையெல்லாம் சரிதானா?
– தீபா, நீடாமங்கலம்

எந்தச் சூழலிலும், பிறப்பு உறுப்பு மற்றும் மார்பகத்தில் இது மாதிரியான செயல்களைச் செய்யாதீர்கள். குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. குழந்தைகளின் மூக்கில் எண்ணெய்விடுவது, வாய்க்குள் விரல்விட்டு நாக்கைச் சுத்தம் செய்வது, மூக்கில் ஊதி அழுக்கை எடுப்பது போன்ற செயல்களை தினமும் செய்ய வேண்டுமென சில பெரியவர்கள் தொடர்ந்து தொந்தரவு செய்வார்கள். அவை அனைத்துமே தவறான பழக்கங்கள்தான். இவற்றால் குழந்தைகளுக்கு எளிதில் நோய் தொற்றிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

குழந்தையை ஆரோக்கியமாக வளர்ப்பதற்கு அவர்களைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருந்தால் போதும். உடல் அமைப்பென்பது மரபணுக்களால் உருவாக்கப்படுவது. அழுத்துவதால் மாறாது. செயற்கையாக மாற்றுவதும் தவறு. குழந்தைக்கு, அதன் உறுப்புகளைச் செயற்கையாக மாற்றுவதற்கென தனியே எந்த வழிமுறைகளும் இல்லை என்பதும் உண்மை. இப்போதைக்கு, ஊட்டச்சத்துமிக்க உணவுகளைக் கொடுத்து, குழந்தையை ஆரோக்கியமாகப் பார்த்துக்கொள்வதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அதுவே போதுமானது.

எனக்கு 22 வயதாகிறது. நான்கு அல்லது ஐந்து மாதங்கள் பீரியட்ஸ் வராமலேயே இருந்தது. மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்து சாப்பிட்டேன். இப்போது 15 நாட்கள் வரையில் பிரீயட்ஸ் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. எதனால் இப்படி ஏற்படுகிறது… இதற்கு என்ன தீர்வு?
– கே.அமுதா, கோவை.

முதலில் ரத்தப் பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை செய்து பீரியட்ஸ் சரியாக வராததன் காரணத்தைக் கண்டறிய வேண்டும். பெரும்பாலும் இரண்டு மாதங்கள் வரையில் பிரீயட்ஸ் வராமல் இருக்கலாம். அதற்கு மேல் வரவில்லை எனில், மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று உடனடியாக மாத்திரை உட்கொண்டு பிரீயட்ஸ் வரவைத்துவிட வேண்டும்.

நான்கு, ஐந்து மாதங்கள் வரையெல்லாம் காத்திருக்கக் கூடாது. பதினைந்து நாட்கள்வரையில் பிரீயட்ஸ் வருகிறதெனில், மருத்துவரை அணுகி ரத்தப்போக்கை நிறுத்த மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும். இல்லையென்றால், அதீத ரத்தப் போக்கினாலும் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உடனடியாக உங்கள் கைனகாலஜி மருத்துவரை நாடி அவசியமான பரிசோதனைகள் செய்துகொண்டு சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள். அதுவே சிறந்தது.

என் குழந்தைக்கு ஏழு வயதாகிறது. அவளுக்கு அடிக்கடி அம்மைநோய் வந்துவிடுகிறது. இதற்கு என்ன தீர்வு?
– தேவேந்திரவேலன், ஆரணி.

சாதாரணமாக நோய்த்தொற்று, பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகள் மூலம் ஏற்படுகிறது. வைரஸ் கிருமிகள் மூலமாகப் பரவும் நோய்கள் சிலவற்றால் சருமத்தில் சிவந்த தடிப்பு, கொப்பளம் ஏற்படலாம் அல்லது சருமம் சிவப்பு நிறத்தில் மாறலாம். பொதுவாக அம்மை வெயில் காலத்தில்தான் அதிகம் பரவும்.

வெயில் காலத்தில் உடலின் வெப்பநிலை சற்று அதிகமாக இருக்கும். அதனால் முகத்தில் கொப்பளங்கள், வேனல் கட்டிகள் போன்றவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அம்மைநோய்க்குத் தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது. சிலருக்கு மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், மறுபடியும் அம்மை நோய் வர வாய்ப்பிருக்கிறது. பொதுவாக வெயில் காலத்தில் திரவ உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

உடலில் கொப்பளங்கள் வந்தாலே அது அம்மை என முடிவெடுத்துவிடக் கூடாது. சருமப் பிரச்னையின் காரணமாகவும் சிவந்த திட்டுகளும், முகத்தில் கொப்பளங்களும் வரக்கூடும். மருத்துவரை அணுகி, உரிய சிகிச்சைகள் எடுத்துக்கொண்டால் போதும். அம்மை என்று நினைத்து நீங்களாக சிகிச்சையில் இறங்க வேண்டாம்.

கடந்த சில நாட்களாக, எனக்கு வாய்ப்புண் மற்றும் தாங்க முடியாத தொண்டைவலி. சரியாகச் சாப்பிட முடியாமல் தவிக்கிறேன். சாப்பிடும்போது மூச்சுக்குழாயில் எரிச்சல் ஏற்படுகிறது. எளிய வீட்டு மருத்துவம் ஏதாவது இருந்தால் சொல்லுங்களேன்.
– ராஜரத்தினம், திருச்சி.

வாய்ப்புண் வருவதற்குத் தொற்றுக்கிருமிகள், சத்துக் குறைபாடு, அல்சர் போன்றவைதான் காரணமாக இருக்கும். அதனால் சாப்பிடும்போது மூச்சுக்குழாயில் எரிச்சல், தொண்டையில் வலி போன்றவை ஏற்படும். காரம், புளிப்பு வகை உணவுகள், வறுத்த உணவுகளை முடிந்தவரை தவிர்க்கவும். உணவில் அதிகமாகக் காய்கறிகள், கீரைகள், பழங்களைச் சேர்த்துக்கொள்ளவும்.

மணத்தக்காளிக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவரவும். திரிபலா சூரணம் எடுத்துக்கொள்வது நல்லது. நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள் அது. நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். அனைத்து வயதினரும் இதைச் சாப்பிடலாம். வாய்ப்புண் உள்ளவர்கள் இதைக்கொண்டு வாய் கொப்பளிக்கலாம். அவ்வாறு செய்வதால் வாய்ப்புண் விரைவில் சரியாகிவிடும். தொடர்ந்து மோர், வெள்ளரிக்காய், இளநீர் போன்றவற்றை அதிகமாகச் சாப்பிட்டுவருவது பிரச்னையை எளிதில் சரிசெய்யும்.

The post கவுன்சலிங் ரூம் appeared first on Dinakaran.

Tags : Dr. ,Muthaiah ,Dinakaran ,
× RELATED கவுன்சலிங் ரூம்