நன்றி குங்குமம் டாக்டர்
இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி
வலியை வெல்வோம்!
இந்தக் கட்டுரை எழுதுவதற்கு முன்பு தான் பாப் பாடகி பிங் சாயதா (Ping chayada) கழுத்து மற்றும் தோள்பட்டை வலிக்காக எடுத்துக்கொண்ட தாய் மசாஜ் சிகிச்சையின் போது ஏற்பட்ட விளைவுகள் பற்றிய செய்தியைப் படித்தேன். கழுத்து, தோள்பட்டை வலிக்கு மசாஜ் தவறான சிகிச்சையா என்றால் நிச்சயமாக இல்லை. மேற்குறிப்பிட்ட செய்தியில், USNIH (National Center for Complimentary and Integrative Health) கூற்றின்படி மசாஜ் மிகக் குறைந்த பக்க விளைவுகளை கொண்ட சிகிச்சை முறை.
ஆனால் சிகிச்சை அளிக்கும் முறையில் வேறுபாடு உண்டு. அதாவது கடினமான முறையில் அழுத்தம் கொடுத்தால் அது உடலுக்கு ஊறு விளைவிக்கும். பக்க விளைவுகளை உண்டாக்கும் என விவரித்திருக்கிறார்கள். (News courtesy -The Economic Times).கழுத்து வலி அவற்றின் சிகிச்சைமுறையைப் பற்றி தெரிந்து கொள்ளும் முன் அவற்றின் அமைப்பு இயக்கம் ஆகியவற்றை சுருக்கமாக அறிந்து கொள்வோம்.
நமது உடலையும் தலையும் ஒருங்கிணைக்கும் பகுதிதான் கழுத்து. முதுகெலும்பு 33 ல் முதல் 7 எலும்புகள் கழுத்துப் பகுதியில் தான் உள்ளது. இது தலைப்பகுதியை தாங்கிப் பிடிப்பதோடு கழுத்து அசைவுகளுக்கும் உதவுகிறது. கழுத்தெலும்புகளுக்கு இடையே டிஸ்க் எனப்படும் ஒரு குஷன் போன்ற அமைப்பு எலும்புகளுக்கிடையே உராய்வினை தடுப்பதோடு மட்டும் அல்லாமல் அதிர்வுகளை தாங்கும் வல்லமை பொருந்தியது.
தண்டுவடத்திலிருந்து உடலின் மேற்பகுதிக்கு உணர்வு மற்றும் செயல்பாட்டிற்கான நரம்புகள் கழுத்து எலும்புகளின் வழியே தான் ஊடுருவி செல்கிறது. கழுத்து தசைகள் மற்றும் தசைநாண்கள் தோள்பட்டை, தலை மற்றும் கழுத்திற்கிடையே நங்கூரம் போல செயல்படுகிறது.கழுத்து எலும்புகள் அவற்றிற்கிடையே உள்ள மூட்டுக்களுக்கு இடையே தனிப்பட்ட செயல்பாடுகள், அசைவுகள் உண்டு. அவற்றை கழுத்து மற்றும் தலையை சுற்றி உள்ள தசைகள் கட்டுப்படுத்துகின்றது…
பல முக்கிய நரம்புகள் மற்றும் ரத்தக் குழாய்கள் கழுத்தின் வழியாக உடலுக்குள் செல்கிறது.
கழுத்தின் உடலமைப்பு, உடற்செயலியலின் அடிப்படையில் கழுத்து வலி வகைகள்
இயங்குதன்மையினால் உண்டாகும் வலி (Mechanical Pain)
ரெடிகுலோபதி (Radicular pain).
குறிப்பிடப்பட்ட வலி (Referred pain).
இயங்குதன்மையினால் உண்டாகும் வலி (Mechanical pain):
கழுத்து எலும்பு அல்லது தசைகளில் பாதிப்பு அல்லது சிறு காயங்கள் ஏற்படும் போது உண்டாவது. குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே வலியை உண்டாக்கும்.உதாரணமாக இரவில் சரியான முறையில் உறங்காமல் அதாவது கழுத்து தசைகளுக்கு அதிக அழுத்தம் கொடுப்பது போன்று படுப்பது, நீண்ட நேரம் தொடர்ந்து கம்ப்யூட்டரில் வேலை செய்வது, தலைக்கு நேரடியாக அழுத்தம் கொடுப்பது, அடி அல்லது எலும்பு முறிவினால் உண்டாகும் வலி.தசைப்பிடிப்பு, சுளுக்கு, தசைதிரிபு, போன்றவை இவ்வகையைச் சார்ந்தது.
ரெடிகுலோபதி(Radiating pain):
கழுத்து நரம்புகளில் அல்லது டிஸ்குகளில் அழுத்தம் அல்லது காயங்கள் ஏற்பட்டால் உண்டாகும் வலி, கைகள் மற்றும் தோள்பட்டையில் ஷாக் அடித்ததை போன்ற உணர்வினை உண்டாக்கும்.அந்த நரம்பு கடந்து செல்லும் வழியே உள்ள தசைகள் முழுவதும் வலியை ஏற்படுத்தும்.சில கழுத்து அசைவுகள் அல்லது தோள்பட்டை அசைவுகள் இவ்வலியின் தீவிரத்தன்மையை அதிகப்படுத்தும்.
குறிப்பிடப்பட்ட வலி(Referred pain):
ஒரு பக்கம் ஏற்படும் வலியின் தீவிரம் வேறு ஒரு இடத்தில் உணரப்படுதல் இவற்றிற்கும் நரம்புகளுக்கும் தொடர்பு இல்லை.தலை மற்றும் கழுத்து, தோள்பட்டை இவற்றின் தசைகள் ஒன்றை ஒன்று சார்ந்து ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால் சில நேரங்களில் கழுத்து வலி தலைவலியாக, தோள்பட்டை வலியாகவோ, தாடை வலியாகவோ உணரப்படும்.
“ஒன்னுமே பண்ணல நைட்டு தூங்கும் போது நல்லாத் தான் இருந்தேன். ஆனால் காலையில எழுந்ததும் இப்ப சுத்தமா திருப்ப முடியலே, சுள்ளுன்னு வேற வலிக்குது, தைலத்தை போட்டு தேச்சேன், ஸ்பிரே அடிச்சேன், சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுத்தேன் எதுக்கும் சரியாகலயேன்னு” வாழ்க்கையில் ஒரு முறையாவதும் நம்மள புலம்ப வைத்திருக்கும் இந்த கழுத்து. கழுத்துக்கும் மேல தான் கண் , காது , மூக்குன்னு, எல்லாம் இருந்தும் கழுத்தை நாம் சரியாக கவனித்து இருக்க மாட்டோம்..
கழுத்தின் அமைப்பிற்கே தகுந்தாற்போல் அதை கவனிக்காமல் நமது வசதிக்கேற்ப அதை நாமே டிசைன் செய்து கொள்வதால் வரும் பிரச்னை தான் கழுத்து பிடிப்பு அல்லது சுளுக்கு..
இரவில் உறங்கும் போது இரண்டு மூன்று தலையணைகளை உயரமாக வைத்துக் கொண்டு, ஒரு கையில் மொபைலை பார்த்துக் கொண்டோ, அல்லது பாடலைக் கேட்டுக் கொண்டே குப்புறப் படுத்து நம்மை அறியாமல் உறங்கி விடுவோம்.
இவையனைத்தும் நம்மை அறியாமல் நடக்கும் செயல் அதற்கு கழுத்தின் முக்கியமான பெரிய தசையான ஸ்டெர்னோகிளிஸ்டோ மாஸ்டாய்டு (Sternocleidomastoid muscle) கொடுக்கும் தண்டனை தான் வலியும், தசைபிடிப்பும். இதனை ஆங்கிலத்தில் ‘Sternocleidomastoid Syndrome’ என்போம். பல்வேறு அறிகுறிகள் அல்லது நோய்க்குறிகளின் தொகுப்பை சிண்ட்ரோம் என்கிறோம். இந்தத் தசையானது காதுகளின் பக்கவாட்டில் இருந்து துவங்கி கழுத்தின் முன் பகுதியில் நெஞ்சுக்கூட்டிற்கும் மேல் தோள்பட்டையுடன் இணைக்கும்
எலும்பில் இணைகிறது.
இத்தசையின் இயக்கம் மற்றும் செயல்பாடானது தலையை திருப்புதல் மற்றும் கழுத்தை முன்புறமாக வளைத்தல்.தாடை அசைவுகளை கட்டுப்படுத்துதல் ஆகும்.இந்த இயக்கத்திற்கு நேர்மாறாக தசையில் அழுத்தம் கொடுப்பதாலோ, அல்லது ஒரே நிலையில் வைத்திருப்பதாலோ தசையில் இறுக்கமும் வலியும் உண்டாகிறது.
மேலே குறிப்பிட்ட
* தலையணை உயரம்,
* படுத்துக்கொண்டே மொபைல் பார்ப்பது
* குப்புறப்படுப்பது இவை அனைத்துமே வலிக்கான ஒவ்வொரு காரணிகளாகும்.
இவை தவிர்த்து மற்ற சில காரணிகள்
* சரியான உடலமைப்பு நிலை இல்லாமல் இருத்தல்(poor posture)
* வயது மூப்பு
* கழுத்துப்பகுதியில் அதிர்வை ஏற்படுத்தும் படி அடிபடுதல் ( whiplash)
* தொழில் சார்ந்த (உதாரணம் வயலின் வாசிப்பவர்)
* பாரம் தூக்குதல்
* தவறான உடல் நிலையில் உடற்பயிற்சி, நீச்சல் பயிற்சி செய்தல்..
* மன அழுத்தம், கவலை.
அறிகுறிகள்
* வலி (pain)
* தசைப்பிடிப்பு (stiffness). தாண்டி
நம்மை ஆச்சரியப்படுத்தும் சில அறிகுறிகள்
* அடிக்கடி ஏற்படும் தலைவலி(frequent headache)
* கண்ணிமை மாறுபாடு (ptosis)
* கண் சிவத்தல் மற்றும் நீர் வடிதல் (unexplained lacrimation and eye reddening)
* சைனஸ், தொண்டை வலி (sinusitis and sore throat)
* காது அடைப்பு (ear popping sounds)
* உடல் சமநிலையற்ற நிலை (balance problem)
* தலைச்சுற்றல் (postural dizziness)
வயது மூப்பு மற்றும் ஸ்டெர்னோகிளிஸ்டோ சிண்ட்ரோம்:
நமது உடல் எடையில் தலையின் எடையானது 2.3 -5.5 கிலோ வரை இருக்கும். கழுத்து எலும்பு மற்றும் தசைகள் தலையின் எடையை தாங்குவதோடு, இவற்றின் தசைகள் கபாலத்தில் உள்ள கண் மற்றும் காதுகளை நீண்டகாலம் சமநிலையில் வைத்திருக்கவும் உதவுகிறது.வயது மூப்பின் காரணமாக இத்தசைகள் வலுவிழந்து கூன் விழுந்த தோற்றத்தை ஏற்படுத்தும், இதனை சமன் செய்ய எலும்புகள், தசைகள் தொடர்ந்து முற்படும். மேலும் நடையிலே மாற்றமும், எலும்பு மூட்டு இயக்கத்திலே சிறிது பாதிப்பும் அதனால் வலியும் உண்டாகும். இது வயது மூப்பினால் உண்டாகும் கழுத்து வலி.
வலியை தூண்டும் புள்ளிகள் (Trigger points):
காதின் பின்பகுதியில் இருந்து துவங்கும் தசையானது கீழ் நோக்கி வரும் போது இரண்டு பகுதியாக பிரிகிறது. எந்தப் பகுதியில் வலியைத் தூண்டும் புள்ளிகள் அதிகமாக உள்ளதோ அதைப் பொறுத்து மேற்கூறிய அறிகுறிகள் தோன்றும்.
சிகிச்சை:
* உடல்நிலைத்தன்மையில் மாற்றம் (poor posture) ஏற்பட்டிருந்தால் அதற்கான உடற்பயிற்சிகள்.
* நீண்டகால அதிக வலியாக இருந்தால் அதற்கான தொடர் பிசியோதெரபி சிகிச்சை.
* மசாஜ்
* சுடு நீர் ஒத்தடம்
* ட்ரிக்கர் பாயின்ட் ரிலீஸ்
* ஸ்டிரெட்சிங் (Stretching)
* வலி குறைந்த பின்பான வலுவேற்றும் பயிற்சிகள்
* மன அழுத்தம், கவலையினால் ஏற்பட்ட வலி என்றால் அதற்கான சிகிச்சைகள் யோகா பயிற்சிகள்.
இவையெல்லாவற்றையும் விட முக்கியமானது நம்ம அம்மாவோட கை வைத்தியம். வேறொன்னும் இல்லை தூங்கும் போதாவது அந்த போனைத் தூக்கி ஓரமாவையி தான். பொதுவாக நாம் எந்த சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் அதன் அறிகுறிகள் சரியாகி விட்டாலே நோய் குணமடைந்ததாக நிறுத்தி விடுகிறோம். ஆனால் காரணிகளை முழுமையாக கண்டறிந்து சிகிச்சை காலம் முடிந்த பின்பும், தொடர் பயிற்சிகளை செய்வதன் மூலமே ஓரளவு முழுதாக குணப்படுத்த இயலும்.அடுத்த கட்டுரையில் கழுத்து மற்றும் தோள்பட்டை வலியை ஏற்படுத்தும் மற்றொரு தசையினை பற்றி அறிந்து கொள்ளலாம்.
The post கழுத்து வலியிலிருந்து விடுதலை பெறுவோம்! appeared first on Dinakaran.