×

16 வயதில் ஸ்டாடர்டப் நிறுவனம்!

நன்றி குங்குமம் தோழி

மாணவர்களுக்கு விருதளிக்கும் பள்ளி!

ஒவ்வொரு மாணவனின் இரண்டாவது வீடு அவர்களின் பள்ளிக்கூடம். அவர்கள் வீட்டில் இருக்கும் நேரத்தைவிட பள்ளியில்தான் அதிக நேரம் செலவு செய்கிறார்கள். மாணவர்களின் எதிர்கால அடித்தளம் உருவாக்கப்படும் இடமும் பள்ளிக்கூடமே. பள்ளிப்படிப்பு முடித்தவுடன் கல்லூரி, அதன் பிறகு வேலை என்பதுதான் காலம் காலமாக நிகழ்ந்து வருகிறது. ஆனால் இவர்கள் பள்ளியில் படிக்கும் போதே எதிர்காலத்தில் என்னவாகப் போகிறார்கள் என்பதை தேர்வு செய்துவிடுகிறார்கள்.

அந்த இலக்கை நோக்கி பயணிக்கவும் துவங்குகிறார்கள். அப்படிப்பட்ட அடித்தளத்தினை தன் பள்ளி மாணவர்களுக்காக ஏற்படுத்தி தந்து வருகிறார் மணிமேகலை. கோவையில் செயல்பட்டு வரும் இவரின் SSVM கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே அவர்களை ஒரு தொழில்முனைவோராக மாற்றி அவர்கள் எதிர்காலத்தின் ஆரோக்கிய பாதையினை ஏற்படுத்தி தருகிறார்.‘‘என்னுடைய சொந்த ஊர் திருச்சி. அங்குதான் உளவியல் குறித்து பட்டப்படிப்பு முடிச்சேன். அதன் பிறகு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் மேற்படிப்பு படிக்க சென்றேன். படிப்பு மேல் இருந்த ஆர்வம்தான் என்னைப் போல் மற்றவர்களுக்கும் அந்தக் கல்வியினை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தினை என்னுள் ஏற்படுத்தியது.

படிப்பு முடிச்ச பிறகு நான் இந்தியா திரும்பினேன். திருமணத்திற்குப் பிறகு கோவையில் செட்டிலானேன். அப்போது உலகளாவிய தர நிலைகள் உள்ளடங்கிய அதே சமயம் நம்முடைய இந்திய மரபுகள் மாறாமல் மாணவர்களுக்கு கற்பிக்கும் சூழலை உருவாக்க வேண்டும் என்று சிந்தனை தோன்றியது. அதன் அடிப்படையில் 1998ல் என் கல்வி நிறுவனத்தை கோவையில் ஆரம்பித்தேன். இங்கு கல்வி மட்டுமில்லாமல், மாணவர்களுக்கு விளையாட்டு, பாட்டு, இசை மற்றும் அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சி என அனைத்தும் முழுமையாக கொடுக்க விரும்பினேன். மேலும் அவர்கள் படிக்கும் பாடங்களை செயல்முறை கல்வி மூலமாகவும் எளிதில் புரிந்து கொள்வதற்கான அனைத்து கல்வி முறைகளை அறிமுகம் செய்தேன்.

இதன் மூலம் அவர்கள் தங்களின் வாழ்க்கையில் எந்த ஒரு பிரச்னை வந்தாலும் அதனை சுலபமாக எதிர்கொள்ளக்கூடிய அளவிற்கு பாடத்துடன் சேர்த்து பயிற்சியும் அளிக்கப்படுகிறது. என்னுடைய கல்வி திட்டத்திற்கு மிகவும் உறுதுணையாக இருப்பது என் கணவர்தான். என் தேவை என்ன என்று தெரிந்து கொண்டு அதனை மிகவும் அழகாகவும் நேரத்தியாகவும் செயல்படுத்துவார். கல்வி என்பது பெரிய கடல். அதில் உள்ள புதுமையை எவ்வாறு அணுக வேண்டும். அதன் மூலம் என் மாணவர்களின் வளர்ச்சியை எவ்வாறு மேம்படுத்த வேண்டும் என்ற என் சிந்தனைதான் என் கல்வி நிறுவனத்தை இந்த இருபத்தாறு வருடமாக வெற்றிகரமாக செயல்படுத்த உதவி இருக்கிறது’’ என்றவர், ஸ்டூடென்ட் பிரனர் விருது பற்றி விவரித்தார்.

‘‘இந்த விருது முழுக்க முழுக்க மாணவர்களுக்காக எங்களின் கல்வி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இந்த விருதில் எங்களின் பள்ளி மாணவர்கள் மட்டுமில்லாமல் மற்ற பள்ளிகளை சேர்ந்த மாணவர்களும் பங்கு பெறுவார்கள். இதில் மாணவர்கள் அவர்களின் பிசினஸ் கண்டுபிடிப்புகளை பற்றி தொகுத்து வழங்குவார்கள். உதாரணத்திற்கு ஒரு மாணவன் சோளத்தின் தோலினைக் கொண்டு ஈகேபிரண்ட்லி கப் மற்றும் பிளேட்களை உருவாக்குவது குறித்து விவரித்தான்.

இது ஒரு சின்ன பிசினஸ் என்றாலும், அதனை சின்சியராக செய்தால், எதிர்காலத்தில் அதுவே அவனுடைய மிகப்பெரிய தொழிலாக மாறும். மேலும் அவர்களின் கண்டுபிடிப்புகள் குறித்து தெரிந்து கொண்டு அவர்களின் பிசினஸ் மாடலுக்கு நிதியுதவி செய்ய இன்வெஸ்டர்களையும் அறிமுகம் செய்கிறோம். ஒவ்வொரு வருடமும் டிரான்ஸ்பர்ம் இந்தியா கான்க்ளேவ் என்ற ஸ்டூடென்ட்பிரனர் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் எங்களின் பள்ளி இணையத்தில் வெளியிடப்படும்.

அதைப் பார்த்து மாணவர்கள் விண்ணபிக்கலாம். அதில் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு முதல் மூன்று பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு 1 லட்சம், இரண்டாவது 75 ஆயிரம். மூன்றாவது 50 ஆயிரம். விருதினை வென்ற மாணவர்களுக்கு மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கும் அவர்கள் மேலும் தங்களின் திட்டத்தில் ஈடுபட அவர்களுக்கு ஊக்கமளித்து அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவுகிறோம். மாணவர்கள் +2 தேர்வில் தேர்ச்சிப் பெற்று பள்ளி வளாகத்தை விட்டு வெளியே போகும் போது ஒரு ஸ்டார்டப் நிறுவனத்தினை எவ்வாறு செயல்படுத்தலாம் என்று முழுமையாக தெரிந்திருப்பார்கள்.

கல்லூரிப் படிப்பினை முடித்த பிறகு நேரடியாக தங்களின் பிசினஸ் மாடலை முழுமையாக செயல்படுத்த துவங்கலாம். ஏற்கனவே இன்வெஸ்டர்கள் இருப்பதால் அவர்கள் வெளியே சென்று ஸ்பான்சருக்கு அலைய வேண்டிய அவசியம் இருக்காது. சில சமயம் நாம் செயல்படுத்தும் திட்டம் சக்சஸாகாமல் போகும். அந்த சமயத்தில் அவர்களுக்கான நியமிக்கப்பட்ட மென்டார் அதனை வேறு கண்ணோட்டத்தில் எவ்வாறு செயல்படுத்தலாம் என்பது குறித்து மறுபரிசீலனை செய்வார். மேலும் அதற்கான வர்க்‌ஷாப்புகளும் ஆசிரியர் முன்னணியில் நடைபெறும். ஆரம்பத்தில் இந்த விருது குறித்து பலருக்கு தெரியாமல் இருந்தது.

அதனால் நாங்க மாணவர்களை இதில் ஈடுபடுத்த விருது குறித்த விளம்பரங்களை சமூகவலைத்தளங்களில் அளித்து வந்தோம். மேலும் மற்ற பள்ளிகளுக்கும் இது குறித்த செய்தியும் தெரிவிப்போம். இப்போது மாணவர்களுக்கு இந்த விருதின் முக்கியத்துவம் என்ன என்று தெரிந்துவிட்டது. இணையத்தில் வெளியாகும் அறிவிப்பிற்காக காத்திருப்பார்கள். வெளியான அடுத்த நிமிடமே மாணவர்களின் விண்ணப்பங்கள் குவிய ஆரம்பித்துவிடும். நாங்க ஆரம்பித்த போது 100 மாணவர்கள் தான் விண்ணப்பித்தார்கள். தற்போது 1000மாக உயர்ந்துள்ளது. இதுவே பெரிய வளர்ச்சியாக நாங்க கருதுகிறோம்’’ என்றவர் மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்வதும் ஒருவித கல்வி என்கிறார்.

‘‘பள்ளியில் மாணவர்களை சுற்றுலாவிற்கு அழைத்து செல்வது வழக்கம். நாங்களும் அழைத்து செல்கிறோம். ஆனால் அங்கு செல்லும் எங்க பள்ளி மாணவர்கள் அந்தப் பகுதியை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வார்கள். காரணம், அங்கு நாள் முழுதும் அவர்களுக்கு அந்த ஊரின் கலாச்சாரம், உணவு மற்றும் அந்தப் பகுதியின் பாரம்பரிய கலைப் பொருட்கள் குறித்து தெரிவிக்கப்படும். இப்போது எல்லாம் தொழில்நுட்பமயமாகி வருகிறது.

அதனால் நாம் நம்முடைய பாரம்பரியத்தை மறந்து வருகிறோம். அதை வருங்கால மாணவர்கள் மூலம்தான் மீட்டெடுக்க முடியும். மேலும் வருங்காலத்தில் கல்வித் துறையில் ஏற்படக்கூடிய மாற்றங்களையும் அதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் நாங்க அவர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம். இதன் மூலம் பள்ளியில் ஆசிரியர் மட்டுமில்லாமல் வீட்டில் பெற்றோரும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும். அப்போதுதான் வளரும் தலைமுறையினரின் எதிர்காலம் பிரகாசமாகவும், எதையும் எதிர்கொள்ளக்கூடிய திறன் படைத்தவர்களாக இருப்பார்கள்’’ என்றார் மணிமேகலை.

தொகுப்பு: ஷன்மதி

The post 16 வயதில் ஸ்டாடர்டப் நிறுவனம்! appeared first on Dinakaran.

Tags : Saffron Girl ,Dinakaran ,
× RELATED நியூஸ் பைட்ஸ்